ஆகஸ்ட்டு 30-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கல்புர்கி என்பவர் கொல்லப்பட்டார்.

கல்புர்கி சாதாரண மனிதன் அல்ல. ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். சாஹித்திய அகாத்மியின் பரிசு பெற்றவர்.

அவர் ஹிந்து மதத்தின் சில நம்பிக்கைகளை குறித்து கேள்வி எழுப்பியதால் அவரை ஹிந்து மத தீவிரவாதிகள் கொன்றிருக்கலாம் என்று தினசரி செய்திகள் கூறுகின்றன.

இப்பொழுது பகவான் என்னும் ஒரு பேச்சாளருக்கும் மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக சொல்கிறார்கள். இனிமேல், ஆவர் காவல்துறை பாதுகாப்புடன்தான் வீட்டை விட்டு வெளியை போவார் போல தெரிகிறது.

அந்தந்த காலத்தில் புத்தரும், மஹாவீரும், குரு நானக் தேவும் ஹிந்து மத நம்பிக்கைகளை விமர்சித்தார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகள் ஹிந்து மதத்திற்கு ஆழமும் வலிமையும் தந்தனவே ஒழிய பலவீனமாக்கவில்லை.

ஹிந்து மதம் கிளைகளை விட்டு ஓர் ஆளமரமாக பரவ ஹிந்து மத நம்பிக்கைகளை கேள்விகள் கேட்பவர்களே காரணம் ஆனார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகள் புதிய சிந்தனைகளை தூண்டின. எங்கேயும் பதில் கிடைக்காதவர்களுக்கு ஹிந்து மதத்தில் பதில் கிடைக்க வழி செய்தன.

கேள்விகளை எழுப்புவதும் அவற்றுக்கு பதில் தேடுவதும் ஹிந்து மதத்தின் அடிப்படை. பதில் தேடும் ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்பவர்தான் உண்மையான ஹிந்து.

ஹிந்துவாக பிறந்ததை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். என் ஹிந்து மத நம்பிக்கைகள் என் உயிர். ஆனாலும்,  "நீங்கள் நம்புகிற ராமர் உண்மையில் வாழ்ந்திருப்பாரா?" என்று ஒருவர் கேட்டால், "வாய்ப்புகள் குறைவு" என்றுதான் சொல்வேன்.  "அப்பொழுது ஏன் ராமரை வழிப்படுகிறீர்கள்?" என்று அவர் கேட்டால், "ராமர் என் ஆன்மீக எண்ணங்களை ஒன்றாக இணைத்து அவற்றுக்கு ஒரு வடிவம் அளிக்கிறார்" என்பேன்.

மனதில் வாழும் ராமர் உண்மையில் வாழ்ந்திருந்த ராமரைவிடஎன்னை கடவுளுக்கு நெருக்கமாக கொண்டுவர அதிக சக்தி வாய்ந்தவர். ராமர் உண்மையில் வாழ்ந்தாரா இல்லையா என்ற கேள்வி என் ஆன்மீக வாழ்க்கைக்கு பொருந்தாதொன்று. என்னை பொறுத்து என் மனதில் வாழும் ராமர் எனக்கு போதும்.

கத்தியை கையில் வைத்து "இதை நம்பு அதை நம்பு" என்று திரிபவர்கள் ஹிந்து மதத்தை அழித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

"ந இதி, ந இதி ---- இதுவும் இல்லை, இதுவும் இல்லை" என்பது வேதங்கள் கற்பித்த தத்துவம். அதாவது, கடவுளின் குணங்களை மனிதனால் புரிந்திகொள்ள முடியாது.

"ந இதி, ந இதி" என்பதைக் கூறும் மதம் எப்படி "இதை நம்பு அதை நம்பு" என்று இன்னொருவரை வற்புறுத்த முடியும்.

 கையில் கத்தியை வைத்து ஹிந்து மதத்தைப் பரப்புவர்கள் முதலில் ஹிந்து மதத்தின் அடிப்படை சித்தாந்த்தங்களைக் கற்றுக் கொண்டு உண்மையான ஹிந்துகளாக மாறட்டும்.