oldwomanசமையலறையில் கணவன் ரவிக்காக மதிய சாப்பாடு தயார் செய்துகொண்டிருந்த விகினா, தன் கணவன் யார் மீதோ பயங்கரமான சத்தம் போட்டுக் கதறியதைக் கேட்டு திகைத்துப் போனாள்.

'இவனுக்குத்தான் கோபமே வராதே. இன்னிக்கு என்ன ஆச்சு இவனுக்கு?' கைகளை அவசரவசர அவசரமாகக் கழுவிவிட்டு என்ன நடக்கிறதோ என்பதைக் கவனிக்க விரைந்தாள். அதற்குள் ரவி தலையில் அடித்துக்கொண்டே விகினா பக்கமே வந்துகொண்டிருக்க, இருவரும் பாதி வழியில் சந்தித்து, அவள் அவனிடம், "யார கத்திட்டுருந்தே?" என்று கேட்க, "நீயே போய் பார்! யாரோ ஒரு கிழவி வாசல்ல நிக்கிறா. என்ன வேணும்னு தெளிவா சொல்லவும் மாட்டேங்கிறா. போகவும் மாட்டேங்கிறா. பிச்சைக்காரினு நினைச்சு பத்து ரூபாய் கொடுத்தேன். அதுவும் வாங்க மாட்டேங்கிறா. பைத்தியக்காரி என்னையும் பைத்தியம் ஆக்கிட்டா! இப்போ நீயே போய் சமாளி அவளை," என்றான்.

ரவியின் முகத்தை இரண்டு கைகளாலும் செல்லமாக வருடி, இலேசாக முத்தமிட்ட விகினா, "என்னடா ராசா, தலைகீழா இருக்குதே! என் டயலாக்கை இன்னிக்கு நீ பேசுறியே! எப்பவுமே நான்தானே உன்கிட்ட என்னாலே முடியலே, இப்போ நீயே சமாளின்னு சொல்லுவேன். இன்னிக்கு ஏன் இந்த மாற்றம்?" காதல் கிளியாகச் சிரித்தாள் விகினா.

விகினா ஒரு மன உளைச்சல் டைப் பெண். மிகச் சிறிதொரு பிரச்னையாக இருந்தாலும்கூட டென்ஷனாகிவிடுவாள். கணவனிடம் ஓடுவாள். "என்னால முடியலப்பா. நீ சமாளி," என்பாள். "உனக்கு கடவுள் வலிமை மிக்க தோள்கள் கொடுத்திருக்கிறான். எதையும் சமாளிச்சுடுறே," என்றபடி தலையை அவன் தோள் மீது சாய்த்து, கண்களை மூடி அவன் தோள்கள் அளிக்கும் பாதுகாப்பு உணர்வை ரசிப்பாள்.

அவ்வாறு அவள் உணர்வுபூர்வமாகவும், உடல்ரீதியாகவும் சாய்வது அவனுக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத இன்பம் தரும். இப்பொழுது ரவியே அவளிடம் "இப்போ நீ சமாளி!" என்று கூறியது அவளுக்கு இனிமையாகவும், வினோதமாகவும் இருந்தது.

வாசலைப் போய் அடைந்தவள் திடுக்கிட்டாள். வெளியில் நின்றிருந்தவள் வேறு ஒருவருமல்ல, இருபது வருடங்களுக்கு முன்பு தூக்கத்திலிருந்த சிறுபிள்ளையான தன்னை திடீரென்று ஒரு நடு இரவில் விட்டு விட்டுப் போன அவள் அம்மா. இப்பொழுது கந்தல் துணியில், நரைந்த தலைமுடியுடன், சதையில்லாத எலும்பு கூடான உடலாக அவளுக்குமுன் நின்றிருந்தாள்.தலை சுற்றியது விகினாவுக்கு.

அவள் பள்ளிக்கூட மாணவியாக இருந்தபோது குடி கார அப்பா ஒருநாள் ரத்தவாந்தி எடுத்து இறந்து விழுந்த பிறகு சில நாட்கள் எதுவும் பேசாத அம்மா பைத்தியகாரியாக மாற ஆரம்பித்து ஒரு நாள் சிறு குழந்தையான விகினாவை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டாள். விகினாவின் சித்தப்பா அவளை தன் வீட்டுக்கு அழைத்து வந்து படிக்க வைத்தார். அம்மா செத்துவிட்டதாகவே நம்பினாள் விகினா.

அவளுக்கும் ரவிக்கும் காதல் துளிர்விட்டபிறகு ஒருநாள் அவன் அவளை தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றபோது, ரவியின் அம்மா, "உங்க அம்மா, அப்பா எங்கே இருக்கிறாங்கம்மா?" என்ற கேள்விக்கு பதில் கொடுக்க தன்னை தயார்படுத்தியிராத விகினா, "அப்பா மது அருந்தி செத்த பிறகு அம்மா பைத்தியம் புடிச்சு எங்கேயோ போய் மறைஞ்சுட்டார்" என்று சொல்ல மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மனதில் எண்ணங்கள் பெரிய பாய்ச்சலுடன் வேகம் பிடித்தன. 'அப்பா என் கண் முன்னாலேயே இறந்துவிட்டார். அம்மாவும் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை. என் சென்றகாலத்து இருளை இழுத்துக் கொண்டுவந்து என் வருங்காலத்தை அழிக்கணுமா என்ன?' என்ற கேள்வியை எழுப்பியது மனவிவேகம்.

"அப்பா ஒரு மிலிட்டரி ஆபீஸ்ரா இருந்தார். அப்பாவும், அம்மாவும் நான் சின்னக் குழந்தையா இருந்தபோதே ப்ளய்ன் கராஷிலே இறந்துட்டாங்க," என்றாள்."

ரவியின் அம்மா 'தவறான கேள்வி கேட்டுட்டோமோ!' என்று பேச்சை திசைதிருப்பினார்.

அதுமுதல், விகினாவின் அப்பா ஒரு ராணுவ அதிகாரி என்றே நம்பினார் ரவி. இப்பொழுது திடீரன்று கனவுபோன்ற ஒரு இன்பமான வாழ்க்கையை கலைக்க வந்த கொடூரம் விகினாவின்முன் அவள் அம்மாவின் சொரூபத்தில் நின்றது. சிறுது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்தபடியே மவுனமாக நின்றார்கள். பிறகு அம்மா, "பரவாயில்லை. எனக்குப் புரிகிறது," என்றாள்.

அம்மாவின் பேச்சிலிருந்து, அவள் பைத்தியம் தெளிந்து அவள் மனரீதியாக சாதாரண மனுஷியாகவே இருப்பதாக உணர முடிந்தது விகினாவால் விகினா எதையோ சொல்ல முற்பட்டாள், ஆனால், அதற்குள் ரவி தன் மனைவிக்கு கிழவியால் பெருந் தொந்தரவு இருப்பதாக நினைத்து, அங்கே வந்து, கிழவியைப் பார்த்து, "போம்மா, இந்தா நூறு ரூபாய், எடுத்துக்கோ! இதுக்கு மேலே ஒரு பிச்சைக்காரிக்கு என்னமா கொடுக்க முடியும்?" என்று கூறி சட்டை பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டினை எடுத்து கிழவி பக்கம் நீட்டினான். கிழவி அதை வாங்கி நெற்றியுடன் தொட்டு, கையில் மடித்து வைத்து, "கடவுள் உங்க ரெண்டு பேருக்கும் எல்லா சந்தோஷங்களையும் கொடுப்பார்!" என்று ஆசீர்வதித்து மெதுவாக நடந்து போய்விட்டாள்.

அவள் சென்றதைப் பார்த்து நின்றிருந்த விகினாவைத் தோள்மீது கை வைத்து இலேசாக இழுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தான் ரவி.

விகினா சமையலறைக்குத் திரும்பினாள். ரவி தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அறைக்குச் சென்று பாடல்களைக் கேட்க ஆரம்பித்தான். நீண்ட நேரம் ஆகியும் விகினா ரவியை சாப்பிட அழைக்கவில்லை. ரவி 'ஏன்?' என்பதை உறுதிபடுத்த சமையலறைக்குப் போனான். அங்கே விகினா தரையில் அறையோரமாக உட்கார்ந்து தலையை இரண்டு கால்களுக்கும் இடையே புதைத்து விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள்.

"என்னடா கண்ணா? ஏன் அழுவறே?' கேட்டான் ரவி, கவலையாக.

முதலில் "ஒண்ணுமில்லை" என்று சொன்னவள், "இப்போ நம் வீட்டுக்கு வந்தவள் என் அம்மா," என்றாள்.

ரவிக்குப் எதுவும் புரியவில்லை. அவன் மனதில் விகினாவின் அம்மாவைப் பற்றி வேறொரு படிமம் ஆழமாக பதிந்திருந்தது. 'ஒரு வயதான கிழவிக்கு சரியான உதவி செய்யாமல் விரட்டிட்டோமே' என்ற குற்ற உணர்வில் இப்படி வருத்தப்படுகிறாள் என்று நினைத்த ரவி, "இப்படி எத்தனையோ வயசானவங்க உலகத்தில இருக்காங்களே. நாம் எல்லாரையும் அரவணைக்க முடியுமா? நாம் கொடுத்த நூறு ரூபாவே அவளை பொருத்தவரை ஒரு பெரிய தொகை. எப்படி நன்றியுணர்வோடு நெற்றியைத் தொட்டார் பார்த்தியா?" என்றான் ஆறுதல் சொல்வது போல்.

இதற்கு மேல் விகினா நாவை அடக்க முடியவில்லை. எல்லாவற்றையும் விவரமாக சொல்லிவிட்டாள். ரவி எதுவும் பேசாமல், முகம் மட்டும் இறுக இறுக, விகினாவை நேரே பார்த்துக்கொண்டே அனைத்தையும் கேட்டுவிட்டு சமையலறையை விட்டு வேளியேறினான்.

விகினா எதையோ சோகமாக யோசித்துக்கொண்டே அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் முன் ஆயிரக்கணக்கான காட்சிகள் வேகவேகமாக ஓடின.

மூன்று மணி நேரம் கழிந்தது. விகினாவால் சமையலறையை விட்டு வெளியே சென்று ரவியை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் இல்லை. அவன் பெற்றோருக்கு இதெல்லாம் தெரிந்தால் என்னவாகும் என்றும் பதறினாள்.

பிறகு திடீரென்று யாரோ சமையலறை பக்கம் வரும் காலடிச் சத்தம் கேட்டது. விகினாவின் இதயம் பதைபதைத்தது. யார் என்பதை ஆவலாகக் கவனித்தவள் பார்வையில் ரவி தோன்றினான். அவனுக்கு பின்னால் நின்றிருந்தது விகினாவின் அம்மா.

"இப்போதைக்கு நீ அம்மாவுக்கு உன்னுடைய துணியையே கொடு. சாய்ந்திரம் புது துணி வாங்கலாம். நான் போய் அம்மாவுக்கு நம்ம ரூமுக்கு பக்கத்து ரூம் ரெடி பண்றேன்" என்றான்.

விகினா எழுந்தாள், ஓடிச் சென்று கணவனைப் பலமாக அணைத்து ஆறாக ஓடிய கண்ணீர்களுக்கு ஊடே "ரவி உன்னைப் போல் வலிமையான தோள்கள் கடவுள் யாருக்கும் கொடுக்கவில்லை. நீ எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க வல்லவன்!" என்றாள் மரியாதை கலந்த கர்வத்தோடு.