ராஜஸ்தானில் மேகனாபூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தனியார் மகளிர் கல்லூரி. அதிகம் போனால் நூறு நூற்றைம்பது மாணவிகள் படிப்பார்கள். அதற்கு மேல் உட்கார இடமும் இருக்காது. 

ராசாராம் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் அந்தக் கல்லூரியை 1950 -களின் தொடக்கத்தில் நிறுவினார். இரண்டு ஏக்கர் பூர்வீக நிலம், அதன் நடுநடுவே ஒரு பாழடைந்த பெரிய கட்டடம். கல்லூரி தொடங்குமுன் அந்தக் கட்டத்தைக் கிராமவாசிகள் பொது காரியங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். இரண்டே இரண்டு அறைகளை மட்டும் ராசாராம் தன் வசம் வைத்திருப்பார் --- ஒன்று, தான் தங்குவதற்காகக் கட்டடத்தின் ஓரத்தில் ஒரு சிறிய அறை, இன்னொன்று, 1934ல் காந்தியடிகள் வந்து நான்கு நாட்கள் தங்கிய கட்டடத்தின் மையப்பகுதியிலுள்ள ஒரு விஸ்தாரமான அறை. 

1934ல் காந்திஜி அந்த அறையில் தங்கியபோதுதான் அவருக்கு ராசாராம் என்ற பெயர் சூட்டினார். அதற்கு முன் அனைவரும்  அவரை பெற்றோர்கள் கொடுத்த பீகு பாய் என்ற பெயர் சொல்லியே அழைத்தார்கள்.

அன்று காலை பொழுதில் சுமார் முப்பது பேர்  உட்கார்ந்து காந்திஜியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, காந்திஜி பீகுவைப் பார்த்து, "இவர் கடமைகளைச் செய்வதில் ராசாராம் போலவே இருக்கிறார், அல்லவா?" என்று சொன்ன வார்த்தைகள் இவ்வளவு காலம் ஆகியும், இன்னும் அவர் மனதில் தற்காலத்தில் அவர் கேட்டது போல் புதுமையாகவே இருந்தன.

அன்று முதல் கிராமவாசிகள் அவரை ராசாராம் என்றே கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.

ராசாராம் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. யாராவது கல்யாணத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தால், "அந்நியர் சங்கிலிகளால் கட்டி அடைக்கப்பட்ட தாய் அவள் மகனுக்கு எப்படிக் கல்யாணம் நடத்துவாள்?" என்று கேள்வி எழுப்புவார். யாரும் எதிர்த்துப் பேச மாட்டார்கள். அந்தக் காலம் அப்படி. எல்லோரும் "சாவைக் காதலிக்கிறேன்" என்று கூறிக்கொண்டே "ரெங்க தே பசந்தி சோலா" என்று பாடித் திரிவார்கள்.

நாடு விடுதலை ஆனபோது ராசாராம் கல்யாண வயதை நன்றாகவே தாண்டிவிட்டார். அதனால், அவரும் அது பற்றி நினைக்கவில்லை, மற்றவர்களும் பேசவில்லை. பெற்றோர்கள் விட்டுப் போன இரண்டு ஏக்கர் நிலமும், அதன் நடுவில் நின்ற கட்டிடமும் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. பிறகு ஒரு எண்ணம் தோன்றியது.

சிலே நாட்களில் பழையக் கட்டிடம் சற்றே புதுபிக்கப்பட்டு மகாத்மா காந்தி பெண்கள் கல்லூரி என்ற பெயரில் ஒரு மகளிர் கல்வி நிறுவனமாக மாறியது.

ராசாராமின் நல்ல உள்ளத்தை மதித்து இளம்பெண்கள் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மிகக் குறைவான சம்பளத்திலேயே ஆசிரியைகளாகப் பணியில் அமர்ந்தார்கள். மிகச் சிறிய கிராமத்திலுள்ள அக்கல்லூரி கல்வித்தரத்தில் வசதிபடைத்த கல்லூரிகளை மிஞ்ச ஆரம்பித்தது. நவீன நகரங்களும், கல்வி மையங்களும் முளைத்து, வளர்ந்துவிட்ட நிலையிலும் மேகனாபூரும் அதன் மகளிர் கல்லூரியும் எளிமையின் சின்னமாகவே தொடர்ந்தது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் நூறு வயது அடைந்துள்ள ராசாராம் சென்ற இரண்டாம் அக்டோபர் காந்தி ஜெயந்தி அன்று,  மகளிர் கல்லூரியில் சென்றாண்டுகளைவிட பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாது செய்தார். அவர் நூறு வயது அடைந்துவிட்டது அதற்கு காரணம் அல்ல. மேகனாபூரில் பிறந்து, வளர்ந்து, அதன் மகளிர் கல்லூரியில் படித்த ரேனுகா மீரா அதே மாவட்டத்தில் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். சுமார் ஒரு மாதத்திற்கு முன் பொறுப்பேற்ற அவர்  ராசாராமின் ஆசீர்வாதத்தைப் பெற வந்திருந்தார். அப்போது ராசாராம் ரேனுகாவை காந்தி ஜெயந்தி விழாவிற்கு அழைத்தார். அவரும் வர சம்மதித்தார்.

அக்டோபர் இரண்டாம் தேதி, பத்து மணிக்கு ஆரம்பிக்கவிருந்த விழாவிற்கு அனைத்து தயாரிப்புப் பணிகளும் மும்முரமாக நடைபெற்றன. ஒன்பதரை மணியிலிருந்தே இரண்டு பெண்கள் விழா மண்டபத்தின் வாசற்படியில் ஆர்த்தி தட்டுடன் நின்று காத்த ஆரம்பித்தார்கள். மண்பத்திற்குள் மாணவிகள் அமர்ந்து ஆசிரியைகளின் உரைகளை மவுனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் --- கடிகாரத்தின் முற்கள் நகர்ந்துகொண்டே போயின. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கல்லூரி முதல்வி ரேனுகாவைத் தொடர்புகொண்டு எப்பொழுது வர இயலும் என்பதைக் கேட்டு ராசாராமிடம் மெல்லிய குரலில் தெரிவித்தார்.

ரேனுகா ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட நேரிட்டதால் வர தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. கடைசியில், அவர் வருத்தமிக்க குரலில், "என்னால் வர முடியாமல் போகும்," என்ற யாரும் விரும்பாத சங்கதியைத் தெரிவித்தார். 

கல்லூரி முதல்வி இந்தத் தகவலை மாணவிகளிடம் ஒலிபெருக்கியில் அறிவிப்பாக சொன்னபோது அனைத்து மாணவிகளும் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள். ரேனுகா அவர்களுக்கு ஒரு அக்காள் போல. கல்லூரி படிப்பு முடித்து கிராமத்தை விட்டு போன பிறகு அவர் அதிகமாக கிராமத்திற்கு வந்ததில்லை. இப்பொழுது அவரை ஒரு மூத்த அதிகாரியாகப் பார்க்க கல்லூரி மாணவிகள் மிகவும் ஆவலாக இருந்தார்கள். வேறெந்த சிறப்பு விருந்தினருக்காகவும் செய்யாத அலங்காரங்கள் அக்கல்லூரியில் அவர்கள் மனதார செய்திருந்தார்கள். காலையிலிருந்து ஒவ்வொரு நொடியும்  ரேனுகாவுக்காகக் காத்திருந்தார்கள். இப்பொழுது அவர் வரமுடியவில்லை என்பதைத் அறிந்து மனமுடைந்து போனார்கள்.

சோகமான முகங்களுடன் எழத் தொடங்கிய மாணவிகள் ஒரு வினோதமான குரலைக் கேட்டார்கள்.

"நில்லுங்கள்!" என்றது அக்குரல். அனைவரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

விழா மேடையின் பின்பகுதியில் நிறுவப்பட்டுள்ள மனித அளவு படத்தின் திரையை விலக்கிவிட்டு காந்தியடிகள் வெளியே வந்ததுபோல் ஒரு பிரமிப்பு அனைவருக்கும் ஏற்பட்டது.

படத்திலிருந்து வந்த உருவம் மேடையின் நடுவே காந்தியடிகள் உட்காரும் வழக்கமான முறையிலேயே உட்கார்ந்தது.

"திகைப்பு அடைய வேண்டாம்!" என்றது அவ்வுருவம். "உடல் அழியும். ஆனால், கொள்கை அழியாது. உங்கள் கல்லூரி செயல்படும் விதம் முழுக்க முழுக்க என் கொள்கையின் அடிப்படையில்தான் என்பதால் என் கொள்கை இங்கே உள்ள காற்றிலேயே அணுக்கள் போல் மிதக்கிறது. இப்பொழுது நீங்கள் இவ்வளவு பேர் ஒன்றாகச் சேர்ந்து மனக்கூர்மையுடன் சிந்திக்க ஆரம்பித்ததால் உங்கள் எண்ணங்களின் சக்தியினால் இந்தக் கொள்கை ஒரு உருவம் எடுத்து உங்களுக்கு முன் அமர்கிறது."

முகத்தில் புன்முறவளுடன் அனைவரையும் பார்த்தது அவ்வுருவம். பிறகு தொடங்கியது, "மனதின் சக்திதான் இறுதியான, உறுதியான வெற்றியை அளிக்கிறது."

ஒரு மாணவி எழுந்து குறுக்கிட்டாள், "நீங்கள் வாழ்ந்த காலம் வேறு, நாங்கள் வாழும் காலம் வேறு!"

கல்லூரி முதல்வி, "வாதாடாதேம்மா!" என்றபடி அந்தப் பெண் இருந்த திசையில் நகர ஆரம்பித்து, உருவம், "சொல்லட்டும்! அவள் பேசட்டும்! மனதிற்கு தோன்றும் உண்மையைப் பேசினால்தான் சத்தியம் ஜெயிக்கும்," என்றது.

மாணவிக்கு தைரியம் வந்தது. "உங்களுக்குக் கிடைத்த ஆதர்வு இன்று ஏன் யாருக்கும் கிடைப்பதில்லை? காலம் மாறிவிட்டதா?"

"ஆமாம், மிகவும் மாறிவிட்டது. அன்று தன் மனித உரிமைகளைக் கேட்பவர்களை ஜல்லியான்வாலா பாகில் நமக்கு ஒரு எறும்பு கடிக்கும்போது எவ்வாறு நூற்றுக்கணக்கான எறும்புகளை நசுக்கிவிடுவோமோ அதே போல் ஆயிரக்கணக்கானோரைத் தரைமட்டமாக்கினார்கள். தாய் நாட்டுக்குச் சுதந்திரம் கேட்ட பகத் சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகிய இளைஞர்களை லாஹோரில் தூக்கலிட்டு அவர்களின் சடலங்களைக்கூட உறவினர்களுக்கு இறுதி சடங்குகளுக்காகக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். விடுதலைப் பற்றி இலேசான பேச்சுக் கொடுத்தவர்களைக் கூட அந்தமானில் ஒரு ஆள் மட்டும் நிற்கத்தக்க சிறிய அறைகளில் அடைத்துவிட்டு மிருகங்களாக  நடத்திவிட்டார்கள். அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் ஏக வித்தியாசம். ஆனால், அந்தக் காலத்துத் தேசவாசிகள் மனதில் தெளிவான லட்சியத்தோடு செயல்பட்டார்கள். அந்த லட்சியத்தின் முன் மற்றது அனைத்தும் மிஞ்சிவிட்டது."

சிறிது நேரம் மவுனம் நிலவியது. பிறகு ஒரு மாணவி கேட்டாள், "வாழ்க்கையில் வெற்றி பெற மிக மிக முக்கியமானது எது?"

"நம்பிக்கை" என்றது உருவம். "சுதந்திரம் என்றைக்கு ஒருநாள் கிடைக்கும் என்று நம்பினோம். அகிம்சை வழியில் சுதந்திரம் பெற முடியும் என்பதை நம்பினோம். தடைகள் வரும்போதும் இந்நம்பிக்கையைக் கைவிடவில்லை. நீங்களும் நம்புங்கள். நம்பிக்கை நிறைந்த மனதின் சக்தியை யாராலும் தோற்கடிக்க முடியாது."

இன்னொரு மாணவி எழுந்தாள், "நீங்கள் வாழ்ந்த காலம் எளிமையானது. இப்பொழுது வாழ்க்கையின் தேவைகள் மிகுந்துவிட்டன."

"உங்கள் செயல்களை இரண்டு வகையில் மதிப்பீடு செய்யுங்கள் --- ஒன்று எதை எதை தேவைக்காகச் செய்கிறீகள், எதை எதை ஆடம்பரத்துக்காகச் செய்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து செயல்படுங்கள். ஆடம்பரத்தில் நீங்கள் சிதறடிக்கும் வளங்கள் ஒருவேளை நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் அவசியமான வளங்களாகவே இருக்குமோ என்பதை யோசியுங்கள்."

"இரண்டாவது," தொடர்ந்தார் உருவம், "சமுதாயம் உங்களுக்கு என்னென்ன எந்தளவு கொடுக்கிறதோ, அதைவிட அதிகமாக திருப்பிக் கொடுங்கள்."

"சரி, இப்பொழுது நான் போக நேரம் ஆகிவிட்டது," என்ற உருவம் எழுந்து நின்றது. மாணவிகளும் ஆசிரியைகளும் எழுந்து நின்று கைகளைத் தட்டி நன்றி தெரிவித்தனர். உருவம் படத்திற்குள் நுழைந்து மறைந்தது.

அனைவரும் நின்று கைகளைத் தட்டி கரகோஷம்  செய்து வண்ணம் இருந்தார்கள். ராசாராம் மட்டும் எந்திரிக்காமல், கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். கல்லூரி முதல்வி "ஐயா! ஐயா!" என்று பலமுறை கூப்பிட்டும் பதில் வரவில்லை. ராசரராமை இலேசாக அசைத்துப் பார்த்தார் முதல்வி. ராசாராம் ஒரு பக்கம் விழுந்தார் சடலமாக.

"ஒருவேளை நம்மோடு பேசிக்கொண்டிருந்தது ராசாராம் ஐயாவின் ஆன்மாவோ!" என்ற கல்லூரி முதல்வி, "காந்தி ஜெயந்தி அன்று காலமான அவர் தன் குருவான மகாத்மாவிடம் போய்ச் சேர்ந்துவிட்டார்," என்றார் சந்தோஷம் கலந்த வருத்தத்துடன்.

 

கர்ம யோகா என்பது என்ன?

ஒரு சிறுகதையைச் சொல்லி விளக்குகிறேன்.

மதுரையைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரன் முருகவேலுக்கு டுன்னு, முன்னு, நுன்னு என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.

அவர்கள் பருவ வயதை எட்டியதும் முருகவேல் அவர்களுக்கு தன் சொத்தில் பங்கு கொடுக்க முடிவு செய்தார். மூவருக்கும் சரி சமமாக வயல்களும், மாளிகைகளும், ரொக்கப் பணமும் வழங்கி அனுப்பினார்.

ஆறு மாதங்கள் கழித்து டுன்னு தந்தை முருகவேலுக்கு  ஒரு அழைப்பு அனுப்பினார். டுன்னு குடும்பத்துடன் வாழ்ந்து வந்த கிராமத்துக்கு புறப்பட்டார் முருகவேல். கிராமத்தில் நுழைந்ததுமே அவருக்கு ஒரு இனிய அதிர்ச்சி. அவர் மகனுக்குக் கொடுத்த வயல்கள் பல வண்ணங்கள் கலந்த பசுமையாகக் காணப்பட்டன. வயல்களில் பணி செய்யும்  ஆண்களும், பெண்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், வண்ண வணண ஆடைகள் அணிந்து மலர்ந்த முகமாய் காணப்பட்டனர். வயல்கள் வழியாகப் போய்க்கொண்டிருப்பவர் டுன்னுவின் அப்பா என்பதை அறிந்ததும் வயல்களில் வேலை செய்பவர்கள் அவரது கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார்கள், டுன்னுவை மனமார பாராட்டினார்கள்.

டுன்னு சமீபத்தில் தொடங்கியுள்ள ஒரு கல்லூரியின் கலாச்சார விழாவிற்கு தன்னை அழைத்திருப்பதாக அறிந்த முருகவேல் நேரடியாக கல்லூரிக்குச் சென்றார். அங்கே மேடைக்கு பின் சுவரில் முருகவேலின் படம் வரையப்பட்டிருந்தது. அப்பாவைப் பார்த்து டுன்னு குடும்பத்துடன் முன் வந்து, அப்பாவின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். அவரை ஒரு பீடத்தில் அமர வைத்து தன் உரையில் தன் வெற்றிகள் அனைத்துக்கும் அப்பா தான் காரணம் என்று புகழ்ந்தார். அப்பாவுக்காகவே பிரத்தியேகமாக ராஜஸ்த்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகான தலைப்பாகையை அப்பாவுக்கு அணிவித்தார். முருகவேலின் மனம் பூரிப்படைந்தது. ஊருக்கு திரும்பிய பின் அவர் எப்பொழுதும் டுன்னுவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இரண்டாவது மகன் முன்னுவும் அப்பாவிற்கு அழைப்பு அனுப்பினார்.  முருகவேல் மிகுந்த எதிர்பார்ப்புடன் புறப்பட்டார். ஆனால் முன்னுவின் கிராமத்தில் நுழைந்ததும் அவருக்கு பெரும் அதிர்ச்சி. அவர் மகனுக்குக் கொடுத்த நிலங்கள் தரிசாகக் கிடந்தன. ஆங்காங்கே முற்செடிகள் மட்டுமே வளர்ந்திருந்தன.

முன்னுவின் வீட்டைச் சென்றடைந்தார் முருகவேல். அங்கே முன்னுவும், அவரின் மனைவியும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். தந்தையைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தார் முன்னு. "அப்பா, என்னைக் காப்பாத்து. மகன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். பணம் கட்ட எங்களுக்கு வசதி இல்லை. நீ கொடுத்தா தான் உண்டு," என்றார் பரிதாபமாக.

அப்பாவுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. "உனக்குத்தான் எவ்வளவோ சொத்து கொடுத்தேனே. எல்லாத்தையும் வீணாக்கிட்டியே, சோம்பேறி!" என்று மகனை திட்டினார். பிறகு ஆஸ்பத்திரி செல்வுகளை செலுத்திவிட்டு மனபாரத்துடன் ஊருக்குத் திரும்பினார்.

இன்னும் ஆறு மாதங்கள் ஆகின. மூன்றாவது மகன் நுன்னுவைப் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. முருகவேலுக்கு கவலையாக இருந்தது. மகனைத் தேடத் தொடங்கினார். நீண்ட தேடலுக்கு பிறகு நுன்னு இருந்து வந்த ரகசிய முகாமைக் கண்டுபிடித்தார். நுன்னு அனைத்து சொத்துக்களையும் விற்று "எம் ஃபார் மர்டர்" என்னும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். அந்த இயக்கத்திற்கு ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தால் நீங்கள் சொன்ன நபரை அவர்கள் கொலை செய்துவிடுவார்கள்.

இதை அறிந்த முருகவேல் மிகுந்த வருத்தப்பட்டார். "ஏன் இப்படியொரு மகனை பெற்றெடுத்தே?" என்று மனைவியைத் திட்டினார்.

இப்பொழுது இக்கதையின் இன்னொரு வடிவம்.

டுன்னு, முன்னு, நுன்னு ஆகிய மூன்று ஆன்மாக்கள் பிறவிக்காக கடவுளுக்கு முன் நிறுத்தப்பட்டன. கடவுள், "இவர்கள் என் மகன்கள். இவர்கள் மூவருக்கும் ஆரோக்கியமான உடலும், மனித மூளையும், 100 வருட வயதும் தந்தையாகிய என் சார்பாக கொடுங்க," என்று உத்திரவிடுகிறான். மூவரும் மனிதர்களாக பிறக்கிறார்கள்.

நாற்பது வருடங்கள் கழித்து கடவுள் தேவர்களுடன் சாவகாசமாக பேசிக் கொண்டிருந்தபோது டுன்னு அவனை அழைப்பது போல் ஒரு உணர்வு கடவுளுக்கு ஏற்பட அவன் புறப்பட்டு டுன்னு வாழும் கிராமத்திற்கு செல்கிறான். அங்கே பசுமை நிறைந்த வயல்களில் அவன் படைத்த ஆண்களும் பெண்களும் சந்தோஷமாக வேலை செய்வதைப் பார்த்து கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கிறான். பிறகு டுன்னு நடத்தும் கல்லூரிக்குச் செல்கிறான். அங்கே மேடைக்கு பின் சுவர் முழுக்க ஒரு பெரிய சாமி படம்.

விழாவில் ஒரு பெண் பாடகி பக்தி பாடல் பாடிக் கொண்டிருந்தாள். குத்துவிளக்கு ஏற்றப்பட்டு அதன் ஞான ஒளி அனைத்து திசைகளிலும் பரவிக் கொண்டிருந்தது. டுன்னு அவரது உரையில் தான் செய்த சாதனைகள் அனைத்துக்கும் கடவுளே காரணகர்த்தாவாக இருக்கிறான் என்று சொல்லிவிட்டு, "இப்பொழுது கூட அவன் நம் கூடவே இருக்கிறான் என்கிறது என் மனம். நாம் அனைவரும் இவ்வுலகத்தின் உரிமையாளரான, நம்மை அனைவரையும் படைத்தவருமான ஈசனை வணங்கி அவரது அருள் நம் மீது எப்பொழுதும் தொடர வேண்டும் என்று வழிபடுவோம்," என்றதும் விழாவில் இருப்பவர்கள் அனைவரும் கண்களை மூடி ஈசனை வழிபட்டார்கள்.

தான் படைத்த மக்கள் இவ்வாறு தன்னை நேசிப்பதைக் கண்ட கடவுள் சந்தோஷபட்டான், ஊதுவத்தியின் இனிய வாசனையை பெருமூச்சாகச் சுவாசித்து ரசித்தான், பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பழங்களையும், இனிப்புகளையும் சுவைத்தான், திரும்பி வந்து தேவர்களுடன் பேசும்போது அடிக்கடி டுன்னுவைப் பாராட்டிப் பேசுவான்.

இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து முன்னுவின் அழைப்பில் சென்ற கடவுளுக்கு ஏமாற்றம். முன்னு தன் மனைவியுடன் ஒரு கோயிலில் சாமி சிலைக்கு முன் நின்று, "சாமியே, நான் பிறவி சோம்பேறின்னு உனக்குத் தெரியும். இப்பொழுது பணக் கஷ்டத்தில இருக்கிறேன். எப்படியாவது காப்பாத்து!" என்று வழிபடுவதைக் கேட்டு, "முட்டாள்!" என்று முன்னுக்குக் கேட்காத மொழியில் திட்டி, அவர் பெயரில் ஒரு சிறிய லாட்டரி டிக்கெட் எழுதிவிட்டு மன வருத்தத்தோடு திரும்பினான்.

இன்னும் ஆறு வருடங்கள் நகர்ந்து விட்டன. நுன்னு என்ன செய்கிறான் என்று எந்தத் தகவலும் வரவில்லையே என்ற எண்ணத்தோடு, கடவுள் உலகத்திற்கு வந்து அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தான்.

நுன்னு ஒரு இரகசியமான இடத்தில் "எம் ஃபார் மர்டர்" என்னும் ஒரு இயக்கத்தை நடத்தி, கூலிக்காக கொலை செய்வதைக் கண்ட கடவுள் கோபமாக வைகுண்டத்திற்கு திரும்பிவிட்டான். பல நாட்கள் யாருடனும் பேசவில்லை. தேவர்கள் "நுன்னு எப்படி இருக்கிறான்?" என்று கேட்டால் அவன் கோபமாக, "அந்த ஆள் என் மகனே இல்லை," என்று சிணுங்குவான்.

நூறு வருடங்கள் முடிந்து, மூன்று நபர்களும் தங்கள் ஆயுளை முடித்து மறுபிறவிக்காக கடவுளுக்கு முன் நிறுத்தப்பட்டார்கள்.

டுன்னுவைக் கண்டு கடவுள் மகிழ்வுற்று, "இவனுக்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த மூளை கொடுங்க, நல்ல ஆரோக்கியமான, அழகான உடல் கொடுங்க, நூற்றைம்பது வருடங்கள் ஆயுள் கொடுங்க," என்றார். டுன்னு கடவுளின் பாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற செல்லும்போது கடவுளே முன் வந்து அவனை செல்லமாக அரவணைத்து தந்தையின் அன்பு செலுத்தினான்.

அடுத்து, முன்னு வந்தபோது கடவுள், "போடா! நான் கொடுத்த சொத்துக்களை உன் சோம்பேறித்தனத்தால் வீணாக்கிவிட்டாய்" என்றான் கோபமாக.

முன்னு கடவுள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, "இனிமேல், நீர் கொடுப்பதை சரியாக பயன்படுத்துவேன்," என்று உறுதியளிக்க, தந்தையான கடவுளின் மனம் உருகி, "சரி, இவனுக்கும் மனித வாழ்வு கொடுங்க," என்று உத்தரவிட்டான். 

நுன்னுவைப் பார்த்ததும் கடவுள், முகத்தில் கோபத்துடன், "இவனுக்கு பாம்பு பிறவி கொடுங்க. இவனைப் பார்ப்பவங்க இவனை விரட்டி விரட்டி அடிக்கட்டும்," என்றான்.

நுன்னு வாய் திறந்து எதையோ சொல்வதற்குள் கடவுள், "போடா!" என்று அவனை நகர்த்த சொன்னான்.

இந்தக் கற்பனை கதை ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறது. ஒரு அப்பா தன் குழந்தைகளுக்கு ஒரு சொத்து கொடுத்த பின் மகன்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆவலாக கவனிப்பார். மகன் உழைத்து, சொத்துக்களை பராமரித்து, அவற்றை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தி அப்பாவுக்கு நல்ல பெயர் சேர்த்தால், அப்பா சந்தோஷபடுவார். அவர் சம்பாதித்துக் கொடுத்ததை மகன் தன் சோம்பேறித்தனத்தால் வீணாக்கிவிட்டால், அப்பா வருத்தப்படுவார். மகன் தனக்கு கொடுக்கப்பட்ட சொத்துக்களைத் தவறான காரியங்களுக்காக பயன்படுத்தி வம்சத்தின் பெயரையே கெடுத்துவிட்டால், அப்பனுக்கு கோபம் வரும். இப்படியொரு மகன் பிறந்திருக்கவே கூடாது என்று அவர் நினைப்பார்.

கடவுளாகிய நமது தந்தை நமக்கு உடல், மூளை, நேரம் ஆகிய சொத்துக்களை கொடுத்திருக்கிறான். நாம் அந்தச் சொத்துக்களை அவனது பெயர் உயர பயன்படுத்துகிறோமா, அவற்றை வீணாக்கி அவன் கொடுத்ததை அவமதிக்கிறோமா, அல்லது அவனுக்கே கெட்ட பெயர் உண்டாக்கும் வகையில் அவன் கொடுத்த சொத்துக்களை அவன் படைத்த மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் முறையில் பயன்படுத்துகிறோமா என்பதை அவன் கூர்ந்து கவனித்து நம்மை நேசிப்பான், வருத்தப்படுவான் அல்லது நம் மீது கோபப்படுவான்.

கடவுள் கொடுத்திருக்கும் சொத்துக்களை மதித்து அவற்றை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்துபவன் கர்ம யோகி.

கர்மயோகி எப்பொழுதும் ஏதோ ஒரு ஆக்கபூர்வமான பணியில் ஈடுபட்டு தனக்கு சொத்துக்களாக வழங்கப்பட்ட ஒவ்வொரு உடல் தசையையும், ஒவ்வொரு மூளை நரம்பையும், ஒவ்வோரு நேர நொடியையும் பயனுள்ள முறையில் செலுத்துவான்.

கர்ம யோகா என்பது ஒரு கர்ம யோகியின் வாழ்க்கை முறை.

 

நீ எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க வல்லவன்!" என்றாள் மரியாதை கலந்த கர்வத்தோடு.T More