குறிப்பு: ஹிந்தி மொழியின் மிகப் பிரபலமான நாவலாசிரியர் மற்றும் கதையாசிரியர் முன்ஷி ப்ரேம் சந்த (1880-1936) எழுதிய 'கஃபன்' என்ற கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. வட இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சடலத்தை ஒரு துணியில் கட்டிக் கொண்டுபோவார்கள். அந்தத் துணி துண்டு 'கஃபன்' எனப்படும்.

தந்தையும் மகனும் குடிசையின் நுழைவாயிலில் அணைந்துவிட்ட அடுப்பின் முன் மவுனமாக உட்கார்ந்துகொண்டிருந்தனர். குடிசைக்குள் மகனின் இளைய மனைவி புதியா பிரசவ வேதனையில் துடித்துடித்துக் கொண்டிருந்தாள். திடீர் திடீரென அவள் கதறலைக் கேட்டு இருவரும் அச்சத்தில் உறைந்துபோவார்கள். குளிர் காலம். அனைத்துத் திசைகளிலும் முழு நிசப்தம். கிராமத்துவாசிகள் விளக்குகளை அணைத்து தூங்கிவிட்டதால் எல்லா பக்கமும் இருட்டாக இருந்தது.

கீசு சொன்னான்: “பிழைக்கமாட்டா நினைக்கிறேன். நாள் முழுவதும் இதே போல துடித்துடித்திருக்கிறா. போய் பாத்துட்டு வா.”

மாதவ் எரிச்சலுடன் பேசினான்: “சாகத்தான் போறான்னா அப்போ சாக வேண்டியதுதானே. நான் உள்ளே போய் என்ன பார்க்கிறது?”

“ரொம்ப கொடூரமானவன்ப்பா நீ! வருஷம் பூரா யாரோடு இன்பங்களை அனுபவிச்சியோ, அவளோடு இப்படி செய்வியா?”

“என்னால அவளை இந்த நிலையில பார்க்க முடியலைப்பா!”

கிராமத்திலேயே சோம்பேறித்தனத்துக்குப் பேர்போன குடும்பம் இவர்களுடையதுதான். கீசு ஒரு நாள் வேலை செய்தால் மூன்று நாட்கள் ஓய்வெடுப்பான். மாதவன் அவனைவிடவும் பெரிய சோம்பேறி. அரை மணி நேரம் வேலை செய்தான் என்றால், இரண்டு மணி நேரம் புகை பிடிப்பான். அதனால்தான், யாரும் அவர்களுக்கு வேலை கொடுக்கமாட்டார்கள். வீட்டில் கைநிறைய சோறு இருந்தாலே போதும். அவர்கள் வேலையைத் தொடமாட்டார்கள். மூன்று-நான்கு வேளை சாப்பாடு கிடைக்காமல் போனால்தான் கீசு மரமேறி கிளைகளை வெட்டி வருவான். மாதவ் அந்த விறகை சந்தைக்குக் கொண்டுபோய் விற்பான். அந்தக் காசு இருக்கும்வரை இருவரும் ஆங்காங்கே சுற்றுவார்கள். மீண்டும் பட்டினியாகக் கிடந்தபோது விறகு அல்லது வேலை தேடிப் போவார்கள்.

கிராமத்தில் வேலை எளிதாகவே கிடைக்கும். விவசாயிகளின் கிராமம். உழைப்பாளிக்கு உத்தியோகப் பஞ்சம் இல்லை. ஆனால், ஆள் கிடைக்காத நிலை ஏற்படும்போது, ஒரு ஆள் செய்யவேண்டிய வேலையை இரண்டு பேர் செய்தாலே போதும் என்ற நிலை வந்தால்தான் இவர்களை வேலைக்குக் கூப்பிடுவார்கள். இவர்கள் துறவியராக இருந்திருந்தால், பொறுமைக்கும் திருப்திக்கும் எடுத்துக்காட்டாக இருந்திருப்பார்கள். அந்த அளவுக்கு லௌகீக விஷயங்களில் அக்கறையில்லாதவர்கள். வினோதமான வாழ்க்கைமுறை கொண்டுள்ளவர்கள். வீட்டில் இரண்டு மூன்று மண் பாத்திரங்களைத் தவிர வேறெந்த சொத்தும் இல்லை. பல்லாண்டுகளாக அதே கந்தல் துணிகளை வைத்தே தன் நிர்வாணத்தை மறைத்து வந்தார்கள். எந்தவித கவலைகளும் அவர்களைத் தொட்டுக் போகவில்லை. கடன் சுமை வேறு. திட்டும் வாங்குவார்கள், அடியும் ;வாங்குவார்கள் ஆனால் இதற்கெல்லாம் வருத்தப்படமாட்டார்கள். இவர்களின் நிலையைக் கண்டு பணம் திரும்பி வராது என்று தெரிந்தும் மக்கள் கொஞ்சமாவது கடன் கொடுத்துவிடுவார்கள். பட்டாணி அல்லது உருளைக்கிழங்கு பயிர் வரும்போது கிராமத்திலுள்ள வயல்களிலிருந்து பட்டாணியோ உருளைக்கிழங்கோ பிடுங்கி நெருப்பில் வறுத்து உண்பார்கள், பத்து பதினைந்து கரும்பு மட்டைகளைப் பிடுங்கிக் கொண்டுவந்து இரவில் ருசிப்பார்கள். இதே வாழ்க்கைமுறையைக் கையாண்டு கீசு அறுபது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டான். மாதவும் தன் மரியாதைக்குரிய அப்பா காட்டிய பாதையிலேயே போய்கொண்டிருந்தான். இன்னும் சொல்லப் போனால், அவனைவிடவும் இரண்டு அடி முன்னேறியேவிட்டான்.

இப்பொழுதும்கூட இருவரும் அடுப்புக்கு முன் உட்கார்ந்து யாருடையதேனும் வயலிலிருந்து தோண்டி, திருடிக் கொண்டுவந்த உருளைக்கிழங்குகளை வறுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கீசுவின் மனைவி இறந்து நீண்ட நாள் ஆகியிருந்தன. மாதவுக்கு சென்றாண்டுதான் திருமணம் நடந்தது. அந்தப் பெண் வீட்டுக்கு வந்ததிலிருந்து இரண்டு பேரும் கவலையில்லாமல் வாழ ஆரம்பித்தார்கள். அவளே இவர்களின் வயிற்றை நிரப்ப போதுமாகச் சம்பாதித்துவிடுவாள். அதனால், இவர்களின் சோம்பேறித்தனம் இன்னும் அதிகமாயிற்று. சுபாவத்தில் சற்று ஆணவமும் தோன்றியது. யாராவது வேலைக்குக் கூப்பிட்டால், இரு மடங்கு கூலி கேட்பார்கள். அவர்களை வாழவைத்து வந்த அதே பெண் இன்று துளித்துளியாகச் செத்துக் கொண்டிருந்தாள். வேறு வழியில்லாமல், இவர்களும் தூங்கப் போக, அவள் சாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

கீசு ஒரு கிழங்கை உரித்துக் கொண்டே, "போய் பாரடா, எப்படி இருக்கா அவ! வம்புலே தான் முடிய போறது. வேறு என்ன ஆகும்? மயானத்திலகூட குறைஞ்சது ஒரு ரூபாய் கேட்பாங்களே."

அவன் உள்ளே போய் வருவதற்குள் கீசு பாதி கிழங்குகளைச் சாப்பிட்டு முடித்துவிடுவான் என்று அஞ்சினான் மாதவ.

"எனக்கு அவளைப் பார்க்க பயமா இருக்கு," என்றான்.

"என்ன பயம்டா? நான் இருக்கிறேன் இல்லை?"

"அப்போ நீயே போய் பார்த்துட்டு வா!"

"என் பொண்டாட்டி செத்தப்போ மூணு நாள் அவ பக்கத்திலேயே உட்கார்ந்துகிட்டேன், தெரியுமா? இவ என்னைப் பார்த்து கூச்சப்படமாட்டாளா? இதுவரை அவ முகத்தையே பார்த்ததில்லை. இப்போ அவ அரைநிர்வாண உடலைப் பார்க்கணுமா? எந்தக் கோலத்தில இருப்பான்னு தெரியலை. நான் உள்ளே போனா வேதனையில சுதந்திரமா கை காலும் ஆட்ட மாட்டா."

"குழந்தை பிறந்திட்டா என்னவாகும்? நம்ம வீட்டில சடங்கு செய்யறதுக்கே ஒரு பொருளும் இல்லையே!"

"கவலைப்படாதே தம்பி! எல்லாமே வந்திடும். இன்னைக்கு நமக்கு ஒரு காசும் கொடுக்காத மக்களே தானா முன்வந்து செலவழிப்பாங்க. நான் ஒன்பது மகன்களைப் பெற்றெடுத்தேன். வீட்டில ஒரு பொருளும் இருக்காது, ஆனால் மேலே இருக்கிறவன் எப்படியோ ஏற்பாடு பண்ணி கரை சேர்த்துவிடுவான்."

அல்லும் பகலும் உழைப்பவர்களின் பொருளாதார நிலையும் இவர்களைக் காட்டிலும் மிக செழிப்பானதாக இல்லை. உழைத்து பிழைக்கும் விவசாயிகளைவிட அந்த விவசாயிகளின் பலவீனங்களைப் பயன்படுத்துபவர்கள்தான் வசதியாக இருந்தார்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தில் இவர்களைப் போல மனப்பான்மை உருவாவதில் ஆச்சரியம் என்ன? ஒரு விதத்தில் பார்த்தால் கீசு விவசாயிகளைவிட கெட்டிக்காரன் என்றே சொல்லலாம். அவன் சிந்திக்காத விவசாயிகளின் குழுவுக்குப் பதிலாக அரட்டையடிப்பவர்களின் குழுவில் போய்ச் சேர்ந்துவிட்டான். அந்த அரட்டையடிப்பவர்களின் தந்திரங்களைக் கையாளும் திறமை அவனுக்கு இல்லை என்பது உண்மைதான். அதனால்தான், அவர்கள் கிராமத் தலைவராகிவிட்டார்கள், ஆனால் இவனை அனைவரும் குறைப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் ஒரு உணர்வு அவனுக்குத் திருப்தி அளிக்கும், அதாவது, அவன் ஒரு பொடியனாக இருந்தாலும் விவசாயிகளைப் போல வீண் உழைப்பு செய்யவில்லை. அவனது எளிமையையும் அப்பாவித்தனத்தையும் தன் சுயநலனுக்காக அவர்கள் பயன்படுத்துவதை இவன் அனுமதிக்கவில்லை.

இருவரும் சூடான கிழங்குகளை சாப்பிட ஆரம்பித்தார்கள். நேற்றிலிருந்து எதுவும் வயிற்றுக்குள் போகாத பசி. கிழங்குகளை ஆற்றிச் சாப்பிடும் பொறுமை அவர்களிடம் அப்பொழுது இல்லை. கிழங்கு வெளியில் ஆறிவிட்டாலும்கூட உள்ளிருந்து சூடாகவே இருக்கும். ஆனால், பற்களால் பிளந்தபிறகு அதன் உட்பகுதி நாக்கையும், தொண்டையையும் பயங்கரமாகச் சுட்டு உள்ளே இறங்கும். கண்களில் கண்ணீர் தோன்றும். ஆனால் அவர்கள் விரைவிரைவாக விழுங்கிக் கொள்வார்கள்.

கீசுவுக்கு தாகூரின் கல்யாணப் பந்தி நினைவு வந்தது. இருபது வருடங்களுக்குமுன் அந்தக் கல்யாணத்தில் சாப்பிட்டது போல் அவர் என்றைக்கும் சாப்பிட்டதில்லை. மாதவிடம், "அந்த சாப்பாட்டை மறக்கவே முடியாது" என்றான். "அந்த மாதிரி வயிறு நிறைய சாப்பாடு அதற்கப்புறம் என்னைக்கும் கிடைக்கவே இல்லை. பெண் குடும்பத்தினர் எல்லாருக்கும் வயிறு நிறைய பூரி-அல்வா கொடுத்தாங்க. எல்லாருக்கும்! சுத்தமான நெய்யில தயாரிச்சிட்டிருந்தாங்க! சூடா! சின்னவனோ, பெரியவனோ எல்லாரும் சாப்பிட்டாங்க. சுத்த நெய் பூரி! சட்டனி, தயிர், முணு வகை கீரை, காய்க்கறி குழம்பு. இப்போ என்னென்ன எண்ணி சொல்றது? எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம். யாரும் தடுக்கலை. எல்லாருமே தண்ணீ சாப்பிட முடியாத அளவுக்குச் சாப்பிட்டாங்க. சாப்பாடு போடுறவங்ககிட்ட வேண்டாம்ன்னு சொன்னாலும் இலையில சூடான வடை வைச்சுட்டு போயிடுவாங்க. இலை மேலே கை வைச்சு வேண்டாம்ன்னு தடுப்போம். ஆனால், அப்போகூட போட்டிட்டுப் போயிடுவாங்க. முகத்தைக் கழுவிட்ட பிறகு வெத்திலை பாக்கும் கொடுத்தாங்க. ஆனால், என்னால வெத்திலையே போட முடியிலை. நிக்கறதே சிரமமாகப் போயிடுச்சு. நேரே போய் படுத்துக்கிட்டேன். அப்படிப்பட்ட பெரிய மனசுக்காரர் அந்த தாகூர்."

மாதவ மனதிலேயே எல்லா பொருள்களையும் சாப்பிட்டது போல் ருசித்தான். பிறகு சொன்னான், "இப்போ யாரும் நம்மை இந்த மாதிரி பந்திகளுக்கு கூப்பிடுறதே இல்லை."

"இப்போ யார் கூப்பிடுவான்? அந்தக் காலம் வேறே. இப்போ எல்லாருமே சிக்கனத்தைப் பத்தி மட்டும்தான் நினைக்கிறாங்க. கல்யாணத்தில செலவு வேண்டாம். கருமாதியில வேண்டாம். அட! ஏழைகளின் பணத்தைச் சுருட்டிச் சுருட்டி எங்கேடா வைக்கப் போறீங்க? சுருட்டுவதில எந்தச் சிக்கனமும் இல்லை. செலவழிப்பதில மட்டும்தான் சிக்கனம். என்னடா இது!"

"நீ இருபது பூரி சாப்பிட்டிருப்பே இல்லை?"

"அதக்கும் மேலே."

"நான் இருந்தா 50 சாப்பிட்டிருப்பேன்".

"நானும் 50க்கு குறைவா சாப்பிட்டிருக்கமாட்டேன். நல்லா தடியா இருந்தேன். நீ பாதிகூட இல்லை."

இருவரும் கிழங்குகளைச் சாப்பிட்டு முடித்து அடுப்புக்கு முன் வேஷ்டிகளை போர்வைகளாகப் போர்த்தி கால்களை மடித்து வயிற்றுடன் ஓட்டிவிட்டு அங்கேயே தூங்கிவிட்டார்கள், இரண்டு மலைப்பாம்புகளைப் போல. உள்ளே புதியா வேதனையுடன் கதறிக் கொண்டிருந்தாள்.

காலையில் மாதவ் உள்ளே போய்ப் பார்த்தான். அவன் பொண்டாட்டி இறந்து கிடந்தாள். வாயைச் சுற்றி ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. கண்கள் இரண்டு கற்கள் போல் மேல்பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. உடல் முழுவதும் புழுதி படர்ந்திருந்தது. வயிற்றில் குழந்தை செத்துவிட்டது. மாதவ் கீசுவிடம் ஓடினான். இரண்டு பேருமே மார்பை தட்டித் தட்டி கதற ஆரம்பித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு வந்தார்கள். மரபுப்படி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

ஆனால், கதறுவதற்கான நேரம் இல்லை அது. சவத்துணியும் விறகும் ஏற்பாடு செய்ய வேண்டும். வீட்டில் ஒரு காசும் இல்லை. அப்பாவும் மகனும் கிராமத்து மிராசுதாரிடம் போனார்கள். அவருக்கு இவர்களை அறவே பிடிக்காது. பல தடவை இவர்களைத் திருடியதற்கோ வேலைக்குச் சரியான நேரத்தில் வராமல் இருப்பதற்கோ செம அடி கொடுத்திருந்தார்.

"என்னடா கீசு? என்ன ஆச்சு?" என்று கேட்டார் மிராசுதார். "இப்போ உன்னைப் பார்க்க முடியறதே இல்லையே. இந்தக் கிராமத்தில இருக்க விரும்புறியான்னு தெரியலை."

கீசு தலையைத் தரையின் மீது வைத்து கண்களில் கண்ணீர் நிரப்பி பேசினான், "எஜமான், பெரிய சங்கடத்தில இருக்கிறேன். மாதவ் பொண்டாட்டி நேத்து இரவு காலமாயிட்டாள். இரவு முழுவதும் வேதனையில் இருந்தாள். நாங்க ரெண்டு பேரும் அவ பக்கத்திலேயே உட்கார்ந்து அவளைக் கவனிச்சோம். எங்களால முடிஞ்ச மருந்து சிகிச்சையெல்லாம் செஞ்சோம். எஜமான், இப்போ சோறு போடக்கூட ஆள் இல்லை. வேரோடு அழிஞ்சிட்டோம்! குடும்பமே நாசமாயிடுச்சே! உங்களுக்குத்தான் நான் எப்பொழுதும் அடிமையா இருந்திருக்கிறேன். நீங்க அருள் காட்டலைன்னா அவ சவத்தைக் கூட எடுக்க எங்களுக்கு அருகதை இல்லை. உங்களைத் தவிர யார் கதவைப் போய் தட்டுறது?"

மிராசுதாருக்கு நல்ல உள்ளம். ஆனால், கீசுவை நம்புவது கருப்பு கம்பளிக்கு நிறமேற்றுவது மாதிரி.

"போடா! நான் கூப்பிடும்போது வருவதில்லை. இப்போ உதவி தேவைப்படும்போது வெட்கமில்லாமே வந்துட்டீங்க!" என்று சொல்லத் தோன்றியது. ஆனால், இது கோபப்படுவதற்கோ, தண்டனை கொடுப்பதற்கோ சந்தர்ப்பமல்ல. மனம் சிணுங்கினாலும் இரண்டு ரூபாய் எடுத்து அவன் பக்கம் வீசினார். ஆனால், ஆறுதல் வார்த்தைகள் வாய்க்கு வரவில்லை. அவனை எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சுமையைக் கழற்றுவது போல் நடந்துகொண்டார்.

மிராசுதாரரே கொடுக்கும்போது, மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க தைரியம் வருமா? அத்துடன், மிராசுதாரரின் பெயரை எப்படி பயன்படுத்துவது என்பது கீசுவுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு அணா, நான்கு அணா என்று சற்று நேரத்திலேயே ஐந்து ரூபாய் சேர்ந்துவிட்டது. ஒருவர் கோதுமை கொடுத்தார், இன்னொருவர் விறகு கொடுத்துவிட்டார். மதிய நேரத்தில் கீசுவும் மாதவும் சவத்துணி வாங்க சந்தைக்குப் புறப்பட்டார்கள். கிராமத்தில் சில பேர் சவத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல மூங்கில் கிளைகளை வெட்ட ஆரம்பித்தார்கள். பெண்கள் இறந்தவளைப் பார்த்து அவள் துரதிர்ஷ்டத்தைக் கருதி கண்ணீர் விட்டுப் போனார்கள்.

கீசு மற்றும் மாதவ் மனதினில் ஏதோ ஒரு கருத்தோட்டம் தொடர்ந்தது. நம் சடங்குகளும் வினோதமானவை. உயிருடன் இருக்கும்போது உடலை மறைக்க துணி கிடைக்காதவளுக்குக்கூட சடலை மறைக்கச் சவத்துணி கிடைக்கிறது. அந்தச் சவத்துணி நெருப்பிலேயே எரிந்து சாம்பல் ஆகிவிடுகிறது. இதே ஐந்து ரூபாய் ஒரிரண்டு நாட்கள் முன்னாடியே கிடைத்திருந்தால் ஒருவேளை சிகிச்சைக்குப் பயன்பட்டிருக்குமே.

இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து அடுத்தவர் மனதில் ஓடுவதைப் புரிந்துகொண்டார்கள். ஆங்காங்கே சுற்றிப் போனார்கள். கடைகடையாக ஏறி இறங்கினார்கள். வெவ்வேறு வகை துணிகளைப் பார்த்தார்கள், ஆனால், எதுவும் பிடிக்கவில்லை. அதற்குள் மாலை பொழுதுவிட்டது. அந்த நேரம் கடவுள் விருப்பமோ என்னவோ, ஒரு மதுக்கடைக்கு முன் சற்று நேரம் நின்றார்கள். பிறகு உள்ளே போய்விட்டார்கள். அங்கே சற்று நேரம் செய்வதறியாதவர்களாக நின்றார்கள். பிறகு கீசு காசாளரிடம் சென்று "ஐயா, ஒரு பாட்டல் கொடுங்க" என்றார். அதைத் தொடர்ந்து, பஜ்ஜியும் மீனும் வந்தது. இருவரும் உட்கார்ந்து சாப்பிடவும் குடிக்கவும் ஆரம்பித்தார்கள். குடிக்கக் குடிக்கப் போதை ஏறியது. கீசு சொன்னான், "சவத்துணி போட்டாலும் என்ன ஆகும்? சடலம் எரியும்போது அதுவும் எரிந்துவிடும். அது என் மருமகளுடன் மேலே போயிடுமா, என்ன?"

மாதவ் ஆகாயத்தைப் பார்த்தான், "உலகத்தில அப்படிப்பட்ட தேவையில்லாத சடங்குகளை உருவாக்கியிருக்கிறாங்களே! மக்கள் பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கா பணம் ஏன் கொடுக்கிறாங்கன்னு தெரியலை. அடுத்த லோகத்தில செத்தவனுக்குக் கிடைக்கிறதா இல்லையான்னு யார் கண்டார்? பணக்காரங்ககிட்ட பணம் இருக்கிறது. மனம் இருந்தால் நெருப்பு போட்டுக்கூட எரித்துவிடலாம். அவங்க இஷ்டம். நம்மகிட்ட எரிவதற்கு என்ன இருக்கிறது? ஆனால், மக்கள்கிட்ட என்ன சொல்வீங்க? சவத்துணி என்னாச்சு ன்னு மக்கள் கேட்கமாட்டாங்களா?"

கீசு சிரித்தான், "பைத்தியக்காரா! காசு எங்கேயோ விழுந்துடுச்சுன்னு சொல்லிடுவோமே. தேடினோம் கிடைக்கலைன்னு கூறிவிடுவோம். நம்பமாட்டாங்க. ஆனால், மறுபடியும் காசு கொடுத்துவிடுவாங்க."

மாதவும் சிரித்தான். இந்த எதிர்பாராத அதிர்ஷ்டத்தை மனதில் புறட்டிப் பார்த்துச் சொன்னான், "ரொம்ப நல்லவள், பாவம்! சாகும்போதும் நமக்கு அருமையான சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டா."

ஒரு பாட்டிலுக்கும் மேல் குடித்து முடித்துவிட்டார்கள். கீசு இரண்டு கிலோ பூரி வரவழைத்தான். சட்டனி, ஊறுகாய், கோழிக்கறி கொண்டுவரப்பட்டன. மதுக்கடைக்கு எதிரேயே கடை இருந்தது. மாதவ் ஓடிப் போய் எல்லாவற்றையும் வாங்கி வந்தான். ஒன்றை ரூபாய் செலவாயிற்று. கொஞ்சம் பணம்தான் மிச்சமிருந்தது. இருவரும் கண்ணியமாக பூரிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், காட்டில் சிங்கம் தன் இரையை ருசிப்பதுபோல். யாரோ கேட்பாரே என்று அச்சமும் இல்லை, பெயர் கெடுமே என்று கவலையும் இல்லை. இந்த உணர்வுகளை இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னமே வென்றுவிட்டார்கள்.

கீசு ஒரு தத்துவஞானியைப் போல சொன்னார், "எங்களுக்கு இப்படிச் சந்தோஷபடுத்தியதற்கு அவளுக்கு புண்ணியம் கிடைக்காதா என்ன?"

மாதவ் பக்தியுணர்வோடு தலையைத் தாழ்த்தி, "கண்டிப்பாகக் கிடைக்கும்!" என்றார். பிறகு, "இறைவா, உனக்குத்தான் எல்லாமே தெரியுமே! அவளுக்கு சொர்க்கம் கொடு! நாங்க இரண்டு பேரும் அவளை ஆசீர்வதிக்கிறோம். இன்னைக்கு நாங்க சாப்பிட்டதுபோல் என்னைக்குமே சாப்பிட்டதில்லை" என்றான்

உணர்ச்சிமிக்கவனாக. ஒரு நொடியில், மீண்டும் ஒரு சந்தேகம் மாதவ மனதில் உதித்தது. "அப்பா," என்றான் தந்தையை நோக்கி, "நாமும் ஒரு நாள் அங்கே போவோம் இல்லை?"

கீசு இந்தக் கேள்வியைப் புறக்கணித்துவிட்டான்.

அங்கே போகும்போது அவள் 'எனக்குச் சவத்துணி ஏன் போடலை?' என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம், என்பது போல் விஷயங்களை விவாதித்து கீசு அவனது சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பவில்லை. பிறகு எரிச்சலுடன் சொன்னான், "நீ பைத்தியம் ன்னு சொல்வா! அவளுக்கு சவத்துணி கிடைக்காதுன்னு நீ ஏன் பயப்படுறே? நான் ஒரு கழுதைன்னு நினைக்கிறியா? அறுபது வயது நான் சும்மாவா வாழ்ந்துட்டேன்? அவளுக்குச் சவத்துணி கிடைக்கும். நாம் நினைக்கிறதைவிடவும் நல்லாவே கிடைக்கும்."

மாதவ் நம்பவில்லை. "யார் கொடுப்பா?" என்று கேட்டான். "காசு முழுமையாவே சாப்பிட்டுவிட்டோமே! அவ எங்ககிட்டதானா கேட்பா! அவளுக்கு தாலி நான்தானா கட்டினேன்!"

கீசு கொந்தளித்தான், "அவளுக்குச் சவத்துணி கிடைக்கும்ன்னு சொன்னேன் இல்லை? ஏன் நம்பமாட்டேங்கிறே?"

"யார் கொடுப்பா ன்னு ஏன் சொல்லமாட்டேங்கிறே?" "யார் இந்தத் தடவை கொடுத்தாங்களோ, அவங்களே கொடுப்பாங்க. காசு மட்டும் நம் கையில கொடுக்கமாட்டாங்க. ஆனால், எல்லா ஏற்பாடும் பண்ணிடுவாங்க."

இருள் பெருகப் பெருக, மதுகடையிலுள்ள ஆரவாரமும் பெருகியது. ஒருவர் பாடினார் என்றால், இன்னொருவர் தன் சாதனைகளைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார். இன்னும் ஒருவர் தன் பக்கத்தில் இருப்பவரைக் கட்டிப்பிடிப்பார், தன் நண்பனுக்கு மது ஊற்றி ஊற்றி கொடுப்பார். போதை நிறைந்த சூழல். சிலருக்கு ஒரு சொட்டு சாப்பிட்டாலே போதை ஏறிவிடும். அந்த அளவுக்கு காற்றிலேயே போதை பரவியிருந்தது. ஒரு சில மணி நேரமாக அவர்களின் கஷ்டங்களை போக்கிவிட்டது போதை. மதுக்கடையில் உள்ளவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோமா, செத்துவிட்டோமா, என்பதையே மறந்துவிட்டார்கள்.

இவர்கள் இரண்டு பேரும் மதுவின் ஒவ்வொரு துளியையும் ருசித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இருப்பவர்கள் அனைவரும் இவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். "அதிர்ஷ்டசாலிகள்! ஒரு முழு பாட்டலையும் இரண்டே பேர் சாப்பிட்டுவிட்டார்கள்!" என்று வியந்தார்கள்

அவர்கள். வயிறு நிறைய சாப்பிட்டபிறகு மாதவ் மீதமுள்ள பூரிகளை அங்கே பசிபார்வையுடன் நீண்ட நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் கொடுத்தான். இன்னொருவருக்குக் கொடுப்பதன் ஆனந்தத்தை தன் வாழ்க்கையில் முதல் முறை அனுபவித்தான் மாதவ்.

கீசு பிச்சைக்காரனைப் பார்த்துச் சொன்னான், "நல்லா சாப்பிடுப்பா! அவளுக்கு ஆசி வழங்கு! இதெல்லாம் அவள் வருமானம். அவள் செத்திட்டாலும் உன் ஆசீர்வாதம் அவளுக்குக் கண்டிப்பாகப் போய்ச் சேரும். மனதார ஆசீர்வாதம் கொடு. உழைத்துச் சம்பாதித்த பணம் இது."

மாதவ் மீண்டும் வானத்தை நோக்கி பார்த்தான். "அவ சொர்க்கத்துக்குப் போவான்னு என் மனம் சொல்றது. அவள் வைகுண்டத்தின் ராணியாவாள்."

கீசு எழுந்து நின்றான். ஒருவித மகிழ்வு அலைகளில் நீந்துவதுபோல் சொன்னான், "ஆமாண்டா! அவ வைகுண்டத்திற்குத்தான் போவா. யாருக்கும் என்றைக்காவது தொந்தரவு தந்தாளா? யாரையும் வேதனைப்படுத்தினாளா? சாகும்போதுகூட நம் வாழ்க்கையின் ஒரு மிகப் பெரிய ஆசையை நிறைவேற்றிவிட்டாள். அவள் வைகுண்டத்திற்குப் போகலைன்னா அப்போ ஏழைகளை லூட்டி அடிச்சபிறகு கங்கையில் ஸ்நானம் செய்து கோயில்களில் தானம் செய்யும் இந்தக் கொழுப்புக்காரங்க போவாங்களா?"

நிரந்தரமின்மைதான் போதையின் சிறப்புத்தன்மை. சிறிது நேரத்திலேயே பக்தியுணர்வு மறைந்துவிட்டு சோகம் தோன்றியது மாதவ் மனதில். அப்பாவிடம் சொன்னான், "அவ வாழ்க்கையில எத்தனையோ துயரங்களைத் தாங்கினாள். சாகும்போது துடிச்சு துடிச்சு செத்தாள், பாவம்!"

கண்கள் மீது கை வைத்து கண்ணீர் விட ஆரம்பித்தான் மாதவ். பிறகு கதறி கதறி அழுதான். கீசு ஆறுதல் சொன்னான், "மகனே, சந்தோஷப்படு. அவ இந்த மாயை விட்டுச் சுதந்திரம் ஆயிட்டா. முக்தி அடைந்துவிட்டாள். அதிரஷ்டசாலி அவ. இவ்வளவு சீக்கிரமா இந்த மாயமான உலகத்தின் உறவு-ஜாலங்களை உடைத்தெறிந்து மோட்சம் அடைந்துவிட்டாள்."

இருவரும் "குள்ளமானவள் ஏன் காதலிக்க விரும்புகிறாள்" என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் ஆடவும் தொடங்கினார்கள். குதித்துக் குதித்து ஆர்வமாக ஆடினார்கள். பலவிதமாக நடித்துக் காட்டினார்கள். கடைசியில் போதையைத் தாங்க முடியாமல் அங்கேயே விழுந்துவிட்டார்கள்.