'ஒரு சின்னப் பையனைக் கொண்ணுட்டோமே!' என்ற குற்றத்தின் மனப்பாரம் சிறிது சிறிதாக ரவியின் மனதை விட்டு நீங்கியது. மீண்டும் நண்பர்களுடன் அமர்ந்து மதுவை ருசிக்கத் தொடங்கினான். அன்று புத்தாண்டு இரவில் நடந்தது வெறும் அந்தப் பையனின் விதியில் எழுதப்பட்டிருந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சங்கதி என்றும் தனக்கும் அதற்கும் எந்தவொரு நேரடியான தொடர்பும் இல்லை என்றும் நம்ப ஆரம்பித்தான். 'யாரோ செத்திருப்பானோ அல்லது அடிப்பட்டிருப்பானோ என்பதினால் வாழ்க்கையின் இன்பங்களை விட்டுவிடுவதா?' என்பான் தன் மனதிற்குள் போதையின் உச்சியில் மிதக்கும்போது.
ஒவ்வொருமுறையும் ரவி போதையுடன் வந்தபோது தாய் தீபிகா வருத்தப்படுவாள், கோபப்படுவாள், திட்டுவாள், ஆனால் கணவனிடம் மறைத்துவிடுவாள். கணவனின் மனஅமைதி முழுமையாகப் பாதிக்கும் என்று தெரியும் அவளுக்கு
ரவி நண்பர்களைப் பார்க்க போகும்போது அவனைத் தடுக்க முயன்றாள். முடியவில்லை. வயதிற்கு வந்த மகன். ஒரு அளவுக்குத்தான் அவனுடன் போராட முடியும்.
பிறகு ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை அவனை சுவாமி கிருஷ்ணசாமி ஆசிரமத்திற்கு அழைத்துப் போனாள்.
கிருஷ்ணசாமி ஆசிரமம் அமரித்ஸரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தரமப்புரா என்ற சிறிய கிராமத்தில் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆசிரமத்தில் கூட்டம் வழிந்தது. தொலைவிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். பலர் திருக்குளத்தில் புண்ணிய ஸ்நானம் செய்துகொண்டிருந்தனர். இன்னும் பலர் உணவகத்தில் பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
10 ஏக்கரில் பரவியிருந்த அந்த ஆசிரமம் ஒரு பச்சைநிற பட்டுப் போர்வை போலவே காட்சியளித்தது. அந்தப் போர்வையிலிருந்து வண்ணவண்ணமான பூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இடையிடையே வெள்ளைநிற கட்டிடங்களில் ஒரு பொறியியல் கல்லூரியும், ஒரு மருத்துவக் கல்லூரியும் இயங்கி வந்தன.
ஆசிரமத்தின் கடைசியில் தாமரை வடிவத்தில் ஒரு சிவப்புநிற கட்டிடம். இதில்தான் சாமியார் தங்குவார். இதே கட்டிடத்திலுள்ள ஒரு பெரிய கூடத்தில் பீடம் ஒன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். ஞாயிற்றுக் கிழமை மட்டும் அவர் உள்ளே ஒரு சிறிய அறையில் உட்கார்ந்து பக்தர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைக் கேட்டறிந்து அப்பிரச்சினைகளைத் தீர்க்க வழி சொல்வார். அதற்காக பக்தர்கள் கூடத்தில் வந்து காத்திருப்பார்கள். ஒரு சிறிய காகிதத் துண்டில் தன் பெயரும் விலாசமும் எழுதி அங்கே உள்ள தொண்டர்களுக்குக் கொடுப்பார்கள்.
தீபிகாவும் தன் பெயரையும் தன் மகன் ரவியின் பெயரையும் எழுதி ஒரு தொண்டரிடம் கொடுத்தாள். இருவரும் அங்கே பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்த கூட்டத்தின் அங்கத்தினர்களாக உட்கார்ந்து கொண்டார்கள்.