ரவியின் அப்பா, முரளி, காலையில் எழுந்ததும் முதல் கேள்வியாக "ரவி இரவு எத்தனை மணிக்கு வீடு திரும்பினான்?" என்று கேட்டார்.

ரவியின் அம்மா, தீபிகா, மகனைக் காப்பாற்றும் நோக்கத்துடன், அவன் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்த போது பழைய சோறு சாப்பிட்டதால் வாந்தியெடுத்து, உடலுக்கு மோசமாகப் போய் அங்கேயே சற்று நேரம் ஓய்வெடுத்து மூன்று மணிக்கு வீடு திரும்பியதாக பொய் சொல்லி சமாளித்தாள்.

காலை ஒன்பது மணிக்கு அப்பா பணிக்குச் சென்றபின் தீபிகா தன் மகன் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு போய் அவனை எழுப்பினாள். ரவியின் வாயிலிருந்து வெளிபட்ட மது வாடை அறை முழுவதும் பரவியிருந்தது. அம்மாவின் மனம் 'இவன் எப்போ குடிகாரனா மாறினான்? எப்படிப்பட்ட நண்பர்களுடன் நேரத்தைக் கழிச்சிட்டிருப்பானோ?' என்று கவலைக்குள்ளாகியது.

'படிப்பு முடிந்து, வேலையைத் தேட வேண்டிய வாழ்க்கை தருணம். பணி நிமித்தம் வெளியூருக்குச் சென்று தனியாகக்கூட குடியேற சந்தர்ப்பம் வரலாமே. கல்யாண வயதும் நெருங்கி வருகிறது. வெளிக் கட்டுப்பாடு இல்லாமல் தானாகவே தன்னை கட்டுபடுத்த வேண்டிய இத்தருணத்தில ரவி கெட்டவங்க நட்பு-வட்டாரத்தில மாட்டிக்கிட்டானோ? அவனுக்கு வருங்காலம் இருட்டாகிவிடுமோ?' என்ற கவலைகள் அம்மா தீபிகா மனதில் ஓங்கி நின்றன.

"எந்திரிடா, பாதி நாள் முடிய போறது!" என்றாள் அவன் கன்னத்தில் லேசாக தட்டி.

ரவி திடீரென்று முழித்து, படுக்கையில் எழுந்து, அமர்ந்து "செத்துட்டானா?" என்று சத்தமாக கேட்டான், அச்ச உணர்வுடன்.

"யாரடா செத்துட்டான்?" கேட்டாள் தீபிகா.

"அந்தப் பையன், நான் அடிச்சேனே," என்றான் இன்னும் தூக்கத்திலிருந்து முழுமையாக வெளிவராதவனாய்.

ரவி ஏதோ கெட்ட கனவு கண்டுவிட்டான் என்று நினைத்த தீபிகா, "வாடா எந்திரி. குளிச்சுட்டு எதையாவது சாப்பிடு. நேத்து இரவும் ஒண்ணுமே சாப்பிடல்லியே நீ. ஏதோ போர் களத்துக்குச் செல்ல தயாரா இருக்கும் போர் வீரன் மாதிரி காலணி போட்டுக்கிட்டே தூங்கிட்டியே!" என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.

படுக்கையில் அமர்ந்திருந்த ரவிக்கு சிறிது சிறிதாக சுயநினைவு வர, அவன் கண்களுக்கு முன் ரத்தக் கோடுகளாக உடைந்து போன அச்சிறுவனின் முகம் தோன்ற ஆரம்பித்தது. அந்த முகத்தைத் தவிர வேறெதுவும் தெளிவாக நினைவு வரவில்லை.

இன்னும் சில நிமிடங்களில் மனம் மேற்கொண்டு தெளிவடைந்தது. தான் திடீரென்று காரை நிறுத்துவது போலவும், ஒருவன் கதறியது போலவும் மங்கலான படிமங்கள் மனத்திரையில் தோன்றின. உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் நடந்ததா அல்லது இது வெறும் அவன் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்ட கனவா என்று மனம் குழம்பியது.

பற்களைத் துலக்கினான், குளித்தான், சாப்பிட்டான் ஆனால் அச்சிறுவனின் உடைந்த முகம் அவனது மனதை விட்டு போகவில்லை. கபடம் இல்லாத அச்சிறுவனின் கண்கள் மிக்க வேதனையில் அவனைப் பார்ப்பது போல் நெஞ்சை துளைத்தன.  களங்கமில்லாத மென்மையான அவனது முகம் கண்ணாடி போல் உடைந்து, ரத்தக் கோடுகளால் துண்டிக்கப்பட்டு, துண்டு துண்டாக சிதறி விழுந்துவிடப் போவது போல் காட்சியளித்தது.

ரவி டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்தான். சமையலறையிலிருந்து சாப்பாடு பரிமாறிக் கொள்ள வெளியே வந்த அம்மாவின் முகம் கோபமாக இருந்தது.

"இதுக்காகவா அப்பா உன்னை படிக்க வச்சார்? இதுவா உன் சாதனை? இதுதாண்டா உன் புத்தாண்டு தீர்மானம் --- குடிச்சுகிட்டு வீடே வாடை அடிப்பது போல் செய்வேன் ன்னு?" என்றாள்.

சற்று நேரம் கழித்து அவன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். "உன் அப்பா கடந்த இருபது ஆண்டுகளில எந்த நிலையிலிருந்து முன்னேறி எந்த நிலைக்கு போனார்னு தெரியும், இல்லை? அவர் இப்படி முன்னேறியதுக்கு அவரது தூயமையான பழக்க வழக்கங்களும், அவரது ஒழுக்கமும் தான் காரணம். எத்தனையோ பேரைத் தாண்டி போயிட்டார் அவர். அவரை எல்லாரும் எப்படி மதிக்கிறாங்க, பாரு! உன்னை மாதிரி குடிகாரனா இல்லை அவர். சாமியார் மாதிரியே இருக்காரு. அவருக்கு புத்தாண்டில மகிழ்ச்சி இல்லையா? குடிச்சா மட்டும் புத்தாண்டு வருமா என்ன? நேத்து இரவு உன் அப்பா ஆபீஸிலிருந்து வந்த பிறகு எங்களை எல்லாரையும் அழச்சுட்டு கோயிலுக்குப் போனார். குடும்பத்துக்காகவும், நாட்டுக்காகவும் பிரார்த்தனை செய்தோம். நீ எங்கேன்னு கேட்டார். ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருக்கிறான்ன்னு நீ இருந்த இடம் தெரியாமே சும்மா சொல்லிட்டேன். நீ எங்கேயோ சாராயத் தொட்டியிலே விழுந்து கிடக்கிறேன்னு எப்படி தெரியும் எனக்கு?" அம்மா அம்பு மேலே அம்பு வீசினாள்.

பிறகு நாற்காலியிலிருந்து எழுந்து, "பெரிய புத்தாண்டு! தள்ளாடிக்கிட்டே வந்தாதான் புத்தாண்டாம். இல்லைன்னா புத்தாண்டே பிறக்காதாம்!" என்று திட்டிக்கொண்டே மீண்டும் சமையலறைக்குப் போய்விட்டாள்.

சாப்பிட்டு முடித்து தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாவகாசமாக படுத்துக்கொண்டான் ரவி. மனதை ஒரு கேள்வி உறுத்தியது: "நான் நேத்து இரவு உண்மையிலேயே யாரையோ அடிச்சுட்டேனா, இல்லை இது வெறும் ஒரு கெட்ட கனவா?" என்று.

சிறுவனின் முகம் மேன்மேலும் தெளிவு அடைந்து அவன் கண்முன் தோன்றியது. அவன் பக்கத்தில் கீழே விழுந்த சைக்கிளுடன் சுமார் ஐம்பது வயதானவன் ஒருவனும், முகத்தில் அதிர்ச்சி கலந்த அச்சத்தோடு, நின்றிருப்பதாகவும், ஓரமாக ஒரு பக்கம் ஒரு மரமும், இன்னொரு பக்கம் ஒரு குப்பை தொட்டியும் என்பது போல் மூளையில் பதிவான பல்வேறு படிமங்கள்  ஒவ்வொன்றாக முன் வந்து ஒன்றிணைந்தன. அவை முழுமையான ஒரு காட்சியை உருவாக்கி, நேற்றிரவு நடந்தது கனவு அல்ல உண்மைதான் என்பதை உறுதிபடுத்தின.

ரவியின் மனம் வருத்தத்தில் மூழ்கியது. கேள்வி மேல் கேள்வி மனதைத் துளைத்தது: "யார் அந்தப் பையன்? இப்போது என்ன நிலையில் இருப்பான்? உயிரோடு இருக்கிறானா, செத்துட்டானா? ஒருவேளை சிகிச்சை செய்ய அவன் அப்பாகிட்ட போதுமான காசு இல்லாமே செத்துடுவானோ?"

ஆங்காங்கே மருத்துமனைகளுக்குச் சென்று அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்ய மனம் துடித்தது, ஆனால் 'அப்படி செய்தால் அந்த வயதானவர் என்னை அடையாளம் கண்டு காவல் நிலையத்தில வழக்கு போடமாட்டாரா?' என்ற அச்சம் மனதைக் கைப்பற்றியது. 

வழக்கும், காவல்துறையும் நினைவிற்கு வரவே ரவியின் மன அமைதி சிதறியது. 'இந்நேரம் ஒரு வாகன விபத்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரிக்க ஆரம்பித்திருப்பார்களே. இன்னும் சற்று நேரத்தில் ஒரு காவல் அதிகாரி கைது செய்ய வந்துவிட்டால் என்னவாகும்?'

ரவியின் மனதில் தோன்றிய அச்சம் ஒவ்வொரு கணமும் அதிகம் ஆக தொடங்கியது. சின்னஞ்சிறிய சத்தங்களும் அவனது மனதை படப்படக்க செய்தன.

வீட்டுக்குத் தாமதமாக வந்ததற்கே இவ்வளவு கோபப்பட்ட அப்பா அவன் கைதான செய்தியை கேட்டு என்ன செய்வாரோ? குடித்து வந்ததற்கு நீண்ட உரை ஆற்றிய அம்மா எப்படி நடந்துகொள்வாளோ? என்றெல்லாம் எண்ணங்கள் அவனது மனதைப் படை சூழ்ந்து கொண்டன.

அன்றிலிருந்து மூன்று நாட்கள் ரவி வீட்டை விட்டு வெளியே போகவில்லை. ஒருவேளை அந்த 50-வயதுகாரன் எங்கேயோ தன் மகனை காயப்படுத்தியவனைத் தேடி அலைந்துகொண்டிருப்பானோ என்ற பயம் ரவியின் மனதை நிரப்பியது. ஒவ்வொரு முறையும் வாசல் மணி அடித்தபோது நெஞ்சம் படபடத்தது --- ஒருவேளை காவல் துறை அதிகாரி கைது செய்ய வந்திருப்பாரோ என்று. ஆனால், நாட்கள் நகர்ந்தன. யாரும் வரவில்லை.

நாட்கள் நகர நகர அச்சம் நீங்கியது. அன்று யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்ற தைரியம் மனதிற்கு தெம்பு வழங்கியது. செய்தித்தாள்களில் அடிபட்டவனைப் பற்றி செய்தி வரும் என்று எதிர்பார்த்தான். வரவில்லை. இன்னும் சில நாட்களில் தான் செய்த குற்றம் மனதிலிருந்து மறைய ஆரம்பித்தது. அமைதியான, மாமூலான வாழ்க்கை முறை திரும்பியது.

சுமார் ஒரு மாதம் கழித்து ரவியின் வழக்கறிஞரான தாய்மாமன் அவர்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தார். ரவியை காவல்துறை தேடவில்லையானாலும் தன்னால் ஒருவன் அடிபட்டுவிட்டான் ---- ஒருவேளை இறந்துவிட்டானோ ---- என்ற குற்ற உணர்வு இன்னும் ஒரு முள் போல் அவன் மனதைக் குத்திக் கொண்டே இருந்தது. சந்தர்ப்பம் பார்த்து தாய் மாமனுடன் குற்றங்களைப் பற்றியும், தண்டனைகளைப் பற்றியும் ஒரு உரையாடல் ஏதேச்சையாக ஆரம்பித்துவிட்டது போல் ஆரம்பித்தான். பிறகு இயற்கையாகவே உரையாடல் வாகன விபத்துக்களைப் பற்றி விவாதிக்கும் திசையில் திரும்பி "ஒரு வாகன விபத்தில் ஒருவன் இறந்துவிட்டால் என்ன தண்டனை கொடுப்பாங்க?" என்று கேட்டான், ஏதோ பொது அறிவு கேள்வி கேட்பது போல்.

"அந்தந்த நீதிபதியை பொறுத்தது இது. சில நீதிபதிகள் ஒருவரின் கவனக்குறைவினால இன்னொருவருக்கு உயிர் போகிறதேன்னு வாகன விபத்தும் ஒரு கொலை மாதிரி என்பாங்க. இன்னொரு வகையானவங்க 'அவன் என்ன கொல்லணும் ன்னு  நோக்கத்தோடவா செய்தான்?' என்று வெறும் மூவாயிரம் ரூபாய் அபராதம் போட்டு முடிச்சுடுவாங்க," என்று விளக்கினார் வழக்கறிஞர்.

அன்று மாலை நேரத்தில் ரவி சற்று தூரத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றான். அங்கே ஒரு பொட்டலம் போல் கட்டியிருந்த பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை உண்டியலில் போட்டான். சிலைக்கு முன் நின்று கண் மூடி முழு மனதுடன், "கடவுளே! நான் எதுவும் தெரிஞ்சு செய்யவில்லைன்னு உனக்கு தெரியும்.எல்லாமே என் விருப்பமில்லாமல் நடந்துவிட்டது. நான் அந்தச் சின்ன பையனை ஏன் காயப்படுத்திருப்பேன். எனக்கு எந்த நோக்கமும் இல்லையே! நான் அவனை இதுக்கு முன் பார்த்ததே இல்லை. ஏதோ விதியின் விளையாட்டு இப்படியொரு சம்பவம் என் கையால் நடக்கணும்ன்னு விதி தீர்மானம் செய்து வச்சிருந்தது. வாகன விபத்துக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் ன்னு வழக்கறிஞர் சொன்னாரே. நான் பத்தாயிரம் உன் உண்டியலில போட்டுட்டேன். இதை என் சார்பாக நான் செய்த குற்றத்துக்கு அபராதமா வச்சுக்கோ. இனிமே, இப்படியொரு சம்பவம் நடக்கவே நடக்காது." என்றான் மனதிற்குள்.

பிறகு, தண்டனை அனுபவித்து, முடித்துவிட்டு, குற்ற உணர்வின் பாரத்தை தனக்கு பின் விட்டு விட்டு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி  இலகுவான மனதுடன் வீட்டுக்குத் திரும்பும் குற்றவாளி போல் எல்லாம் சரியாகிவிட்டது என்று தன் காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.

ஆனால், பத்தாயிரம் ரூபாய் அபராதமாக கட்டி, தாம் புரிந்த குற்றத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்று அவன் நினைத்தது எவ்வளவு பெரிய பிரமை என்பது அவனுக்கு அப்போது புரியவில்லை.