குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை. ஆகவே, பஞ்சாப்காரர்கள் தமிழ் பேசுவதையும், இளையராஜா பாடல்களைப் பாடுவதையும் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். கற்பனையில் எது வேண்டுமானாலும் நடக்குமே!

வருடம் 1999 முடிவுற்று 2000 தொடங்கிய வினாடிகள். உலகின் அனைத்து மக்களும் புத்தாண்டின் வரவை மட்டுமல்லாது புதிய நூற்றாண்டின் வருகையையும் வரவேற்று இனிய கனவுளுடன் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு சில இடங்களில் மட்டும் புத்தாண்டின் கொண்டாட்டத்தின் ஆர்வம் இன்னும் தணியாது இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்ஸரில் உள்ள மாடல் டவுன் பகுதியில்  "சான்ட்ரா" கிளப்பில் புத்தாண்டு விழாவிற்கான கோலாகல கொண்டாட்டம் மணி இரண்டைத் தாண்டியும் அதே வேகத்தில் நடந்துகொண்டிருந்தது.

கிளப்புக்கு வெளியில் எலும்புகளைத் துளைக்கும் குளிர் பனியாக விழுந்து கொண்டிருந்தது, ஆனால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மின்னல் சூடேற்றிகளால் கிளப்புக்குள் உடலுக்கு இதமான வெப்பம் பேணப்பட்டு புத்தாண்டின் சூடு இன்னும் தணியாமல் தொடர்ந்தது.

ஒரு சில வயதானவர்கள் "பை-பை, ஸீ யு அகேன்" என்று சொல்லிவிட்டு போய்விட்டாலும், இளைஞர்கள் கூட்டம் இன்னும் ஆங்காங்கே அப்படியே மந்தமான விளக்குகளின் ஒளியில் ஒவ்வொரு கணமும் மதுவில் இன்னும் ஆழமாக மூழ்கி புத்தாண்டிற்கான புது ஜோக்குகளைப் பரிமாறிக் கொண்டு உரத்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

புத்தாண்டு விழாவின் சூடு தணிய இன்னும் நேரம் ஆகும் என்பதை உணர்ந்த கிளப்பின் 76-வயதான உரிமையாளர் தன் மகன் விக்கியிடம், "இனி நீ பார்த்துக்கோ. என்னால தூக்கம் தாங்க முடியல்லே" என்று கூறிவிட்டு கிளப்புக்கு பின் பக்கம் உள்ள தனது ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.

கிளப்பின் ஒரு மூலையில் ரவி தன் நண்பர்களுடன் உட்கார்ந்து மதுவின் ஒவ்வொரு துளியையும் நாக்கில் நிறுத்திக் கொண்டு புத்தாண்டின் தொடக்க-வினாடிகளின் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

இதுவரை வாழ்க்கையில் அவன் இந்த அளவு மது அருந்தியதில்லை. நண்பர் மஞ்ஜீத் சிங் மீண்டும் புட்டியை அவன் பக்கம் நீட்டியதும், ரவியின் அப்பா அடிக்கடி அவனுக்கு சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது: "வாழ்க்கையில எது செஞ்சாலும் அளவோடு செய்யணும்" என்பார் அப்பா.

"வேண்டாம். நிறைய சாப்பிட்டுவிட்டேன்" என்றான் ரவி மஞ்ஜீத் சிங் நீட்டிய புட்டியை புறம் தள்ளி.

"என்னடா சாமி? புத்தாண்டு ஒவ்வொரு நாளும் வருமா என்ன? நாங்களும் தினமும் உனக்கு இவ்வளவு வாங்கி கொடுக்க எங்ககிட்ட காசு இருக்காதே! இன்னைக்கு கடவுள் புண்ணியத்துல கிடைக்குது. பேசாமே ஆண்புள்ளையா குடிச்சுடு" என்றான் மஞ்ஜீத் சிங். மற்ற நண்பர்கள் சிரித்தார்கள்.

ஹமீத் எழுந்து ஒரு நாடகத்தில் நடிப்பது போல் கைகளை அசைத்து, "பிரபல உருது கவிஞர் டாக்டர் இக்பால் என்ன சொன்னார் தெரியுமா?" என்று சொல்லிவிட்டு தொண்டையைத் தெளிவாக்கி பெருங்கவிஞர் வேறொரு சந்தர்ப்பத்தில், வேறொரு அர்த்தத்தில் சொன்னதை கிளப்பில் இருந்தவர்கள் அனைவரும் கேட்பது போல் உரத்த குரலில் பாடினார்:

"இதயத்தின் பக்கத்தில் விவேகத்தை
ஒரு காவலனாக எப்போதும் வையுங்கள்,
ஆனால், என்றைக்காவது ஒருநாள் நண்பர்களே!
இதயத்தைத் தனியாகவும் விடுங்கள்".

கிளப்பில் அனைவரும், "க்ரேட்! அருமையானது! இன்னொரு தடவை" என்றெல்லாம் பாராட்டினார்கள்.

ஊக்கமளிக்கப்பட்ட ஹமீத் ஒரு மேடை பேச்சாளர் போல், "நண்பர்களே! புத்தாண்டை உணர்வுகளோடு தொடங்குவது சிறப்பானதா, தத்துவங்களோடு ஆரம்பிப்பது சிறப்பானதா?" என்று கேட்க அனைவரும் ஒன்றாக "உணர்வுகளோடு!" என்று பல்லவி பாடுவது போல் இசைத்துச் சொன்னார்கள்.

ஹமீத் தொடர்ந்தான், "ஆக, இன்றைய தினம் நம் மூளையை ஒரு புறம் தள்ளி மூட்டையாகக் கட்டிவிட்டு இதயத்திற்கே அனைத்து அதிகாரங்களையும் கொடுத்துவிடுவது மிகுந்தப் பெருமை, அல்லவா?" அவன் ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்து, இழுத்து கோடிட்டுச் சொல்வது போல் பேசினான்.

"ஆ.....ம்", என்று மீண்டும் பல்லவி பாடி அவன் சொன்னதை ஆதரித்தார்கள் கூட்டத்தினர்.

ஒருவன் "யு ஆர் எ ஜீனியஸ் ப்ரதர்!" என்றான். "ஒரு தத்துவஞானி போலவே பேசறீங்க!"

ஹமீத் அந்த இளைஞர் பக்கம் மரியாதையாக குனிந்து, "மை லார்ட! இது தத்துவ ஞானம் அல்ல. இது போதையின் போதனை," என்று சொல்ல கூட்டத்தினர் கைகளையும், மேஜைகளையும் தட்டி சிரித்தார்கள்.

ஹமீத் தொடர்ந்தான், "நாம் அனைவரும் போதையின் பெருமையை நன்கு அறிந்தவர்கள். அதனாலதான் இப்போது மணி இரண்டைத் தாண்டியும் இங்கே இருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஒரு நாள் மட்டும், சில எல்லைகளை மீறுவது தவறா? சொல்லுங்க. என்னைப் பொருத்த வரையில நீங்க எல்லாரும் நீதிபதிகள். நீங்க வழங்கப் போகும் தீர்ப்புதான் இன்றைய தினம் கடைசி தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு தான் ஆண்டு முழுவதும் அமலாகும். ஆண்டு மட்டும் அல்ல. இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு முழுவதும் நீங்க இன்னைக்கு சொன்ன தீர்ப்பு தான் ஏற்கப்படும்" என்று சொல்லிவிட்டு பலரிடம், "நீங்க சொல்லுங்க சார்... நீங்க சொல்லுங்க சார்..." என்று கேட்டான்.

அவர்கள் அனைவரும், "இல்லை, தப்பே இல்லை!" என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

"பின்னே ஏன் என் தம்பிக்குப் புரியமாட்டேங்குது?" ரவியின் தோளில் கை வைத்து வருத்தத்தோடு அழுவது போல் நடித்தான் மஜீத். அனைவரும் அவனது இந்த ருசிகரமான நடிப்பை ரசித்தார்கள். சிரித்தார்கள். கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

ரவி, "சரி. கொடு சாப்பிடுறேன். என் அப்பாவின் நல்ல மகனைக் கெடுத்துவிடாமே விட மாட்டீங்க போல," என்றான் சிரித்துக் கொண்டே. "என்னைக் கெடுப்பதற்கே இங்கே கூடியிருக்கிறீங்க போல தெரியுது", என்று சொல்லிவிட்டு கையில் தம்பளர் எடுத்து மதுவைப் பருகத் தொடங்கினான்.

இதைக் கண்டு மஞ்ஜீத் சிங், "புத்தாண்டு வாழ்க! அருமை நண்பர் ரவி கோச்சர் வாழ்க! நமது நிரந்தர நட்பு வாழ்க!" என்று கோஷமிட ஆரம்பித்தான். கிளப் உரிமையாளரின் மகன் விக்கி இந்த வேடிக்கையைப் பார்த்து பற்கள் தெரிய சிரித்தான்.

சிறிது நேரம் எல்லாரும் மவுனமானார்கள். பிறகு அறையின் ஒரு மூலையில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் எழுந்து "சுராங்கணி" என்ற பாடலைப் பாடி ஆட ஆரம்பித்தார்கள். இன்னும் சில பேர் அவர்கள் பக்கம் போய் ஆட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

ரவியின் மதுவில் நனைந்த நரம்புகள் ஐம்புலன்களிலிருந்து மூளைக்கு செய்திகளை செலுத்தும் பணியை மழை தண்ணீரில் ஊறிப் போன மின்கம்பிகளைப் போல் மிகவும் மந்தமாக்கிவிட்டன. கேரளத்துக்காரர்கள் பாடிய பாட்டின் ஒலி அவனுக்கு தூரத்திலிருந்து வந்தது போல தெரிந்தது. அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆனந்த பாபு எழுந்து ஆடுபவர்களை நோக்கி தள்ளாடிக் கொண்டே போனான். அங்கே சென்றதும் அவனும் ஆடத் தொடங்கினான். ஆனால், பாட்டு தெரியாததால், "சுராங்கணி .... சுராங்கணி" என்று மட்டும்தான் பாடினான்.

ரவியும், மற்ற நண்பர்களும் எழுந்து நின்று கை தட்டி தாளம் போட்டார்கள்.

ரவியின் மௌபைல் ஃபோன் ஒலித்தது. போதையில் மூழ்கியிருந்த அவனுக்கு ஃபோன் எந்த பாக்கெட்டில் இருக்கிறது என்று ஞாபகம் வரவில்லை. சட்டை பைகளையும், பேண்ட் பைகளையும் கைகளால் தடவி ஃபோனைத் தேடி அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தான்.

"ஹெல்லோ" என்றான்.

மறுபக்கம் ரவியின் அம்மா, "எங்கேடா இருக்கிறே? உன் அப்பா கோபத்திலே எங்களையெல்லாம் திட்டிட்டுருக்கார்," என்றாள்.

"இதோ வந்துட்டேம்மா. அஞ்சு நிமிஷ்த்திலே ரீச் ஆயிடுவேன். வீட்டுப் பக்கம் வந்துட்டேன்," என்ற பொய்யைச் சொன்னான்.

"ஏதோ பாட்டுச் சத்தம் கேக்குதே. எங்கேப்பா இருக்கிறே? சொல்லு! ஏதோ ஹோட்டல்லே இருக்கிறியா? சீக்கிரமா வந்திருப்பா. உன் அப்பாவோட கோபம் தாங்க முடியல்லே," என்றாள் அம்மா, கவலை கலந்த குரலில்.

"இதோ வந்துட்டேன்," என்று அம்மாவிடம் சொன்ன ரவி நண்பர்களிடம் கையை நீட்டி, "ஓகே, ஃபரெண்ட்ஸ், எனக்கு இப்போ போக அனுமதி கொடுங்க. இவ்வளவு சிறப்பான, அருமையான, இன்பமான, இதமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்," என்றான் ஒரு உணர்ச்சி மிக்க நாடகத்தின் கதாநாயகனின் தொனியில்.

பிறகு தள்ளாடிக் கொண்டே போய் கார் கதவைத் திறந்து ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.

கிளப் உரிமையாளரின் மகன் விக்கி ஓடி வந்தான். "ஐயா, இந்நிலையிலே கார் ஓட்ட வேண்டாம். கொஞ்ச நேரம் ஆகட்டும். இல்லைன்னா இங்கேயே தங்கிக்குங்க. நான் ஒரு அறை திறந்திடுறேன் உங்களுக்காக. பின் பக்கம் நாலஞ்சு நல்ல வசதியான ஓய்வறைகள் இருக்கின்றன," என்று கெஞ்சினான்.

"இல்லை தம்பி. வீட்டுலே அம்மா, அப்பா, தங்கச்சி, தம்பி எல்லாரும் காத்துட்டுருப்பாங்களே. நான் போகலேன்னா நம்ம ஆள் செத்துட்டானோன்னு அவங்க பயப்படமாட்டாங்களா?" என்றான் உரக்க சிரித்து.

"நீங்க பேசுறதே ஒரு மாதிரியா இருக்குங்க. வண்டி எப்படி ஓட்டுவீங்களோ? எனக்கு பயம் வர்றது," என்றான் விக்கி.

ரவி சட்டைப் பையிலிருந்து ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டு எடுத்து விக்கியின் கையில் திணித்தான், "இதை வச்சுக்கோ. பயம் வராது. கையில காசு இருக்கிறவன் எதுக்கும் பயப்படமாட்டான்னு என் பாட்டி அடிக்கடி சொல்லுவா," என்றான் ரவி. "என் பாட்டி பெரிய அறிவாளிடா. எல்லா விஷயங்களும் தெரியும் அவளுக்கு. ஞான - அறிவு வேணும்னா வேதங்களையும் சாஸ்திரங்களையும் படியுங்க. சாமியார்களின் சொற்பொழிவு கேளுங்க.  நாணய - அறிவு வேணும்னா என் பாட்டிகிட்ட கொஞ்ச நேரம் உட்கார்ந்து அவளுடைய பணப்பொழிவைக் கேளுங்க. பத்து நாள்லே எங்கேயோ போயிடுவீங்க!" விக்கியின் தோளை இலேசாகத் தட்டிச் சிரித்தான் ரவி.

பிறகு தான் செய்த கிண்டலை நினைத்து உரக்க சிரித்து காரை செலுத்தி ச.ர்.ர்.ர் என்று சாலையைப் பிடித்தான்.

பரந்து விரிந்த சாலையில் மனிதனோ, வண்டியோ, காக்கா - குருவியோ எதுவும் இல்லை. பஞ்சாப் மாநிலத்தின் ஜனவரி மாதத்துக் குளிர். அனைத்துப் பக்கமும் அடர்த்தியான பனி. சாலை அவனுக்காகவே காலியாக்கப்பட்டது போல் உணர்ந்தான் ரவி. "பழமுதிர்சோலை எனக்காகத்தான்" என்ற இளையராஜா பாட்டு ஞாபகம் வந்தது. பாடத் தொடங்கினான்.

போதை பாட்டுக்கும் குரலுக்கும் ஆற்றலும் சக்தியும் வழங்கியது. இரண்டு கைகளாலும் ஸ்டீயரிங் ஹ்வீலில் தாளம் போட்டுப் பாடினான்.

உற்சாகம் இன்னும் கூடியது. தாளத்துடன் இணைந்து ஆடுவது போல் கால்களை எக்ஸெல்ரேட்டர் மீது வைப்பதும் தூக்குவதுமாய் கற்பனையில் தாளத்திற்கேற்ப நடனம் ஆடினான்.

பிரபஞ்சமே புத்தாண்டை கொண்டாடுவது போலவும், அவனும் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வது போலவும் உணர்ந்தான்.

வேகமாகப் போய் கொண்டிருக்கும் கார் திடீரென்று சாலை ஓரமாக போவதைக் கண்டு கட்டுப்படுத்த முயற்சி செய்வதற்குள் அவனை அறியாமலேயே பிரேக் அமுக்கினான். திடீரென்று நின்று போன காருக்கு முன் முகத்தில் இரத்த - கோடுகளுடன் சுமார் பதினைந்து வயது பையன் ஒருவன் தலையிலும், முகத்திலும் பயங்கரமாக அடிபட்டு வலி தாங்க முடியாமல் அலறியபடி இருந்தான். பக்கத்தில் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க வயதானவர் ஒருவர் அடிபட்ட பையனை கீழே விழாதபடி கை கொடுத்து தாங்கிக் கொண்டு ரவியைப் பார்த்து "அடப்பாவி! ஏன் இப்படி பண்ணிட்டே? என்ன கெடுதல் செய்தான் என் மகன் உனக்கு?" என்றார் குரலில் கருணையும், கோபமும் கலந்து.

ரவியின் போதை சற்றே நீங்கியது மனம் பயத்தில் உறைந்தது.

"என் கார் மோதி அடிபட்டுட்டானா இவன்?" என்று கவனமாகப் பார்த்த ரவிக்கு "வம்புல மாட்டிக்கிட்டோமே!" என்ற பயம் ஓங்கி வர வேகமாக காரைத் திருப்பி வீட்டுக்கு பறந்துவிட்டான்.

வீட்டில் அம்மா அவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தாள். கணவனை தூங்கச் சொல்லிவிட்டு மேஜையில்  சாப்பாடு வைத்து மகன் வருகைக்காகவே காத்துக்கொண்டிருந்தவள் கார் சத்தம் கேட்டு வெளியே போனாள். மகன் ஒரு மாதிரி தள்ளாடிக் கொண்டே வருவதை கண்டு கவலைப்பட்ட அவள், "நல்ல வேளை உன் அப்பா தூங்கிட்டார். இல்லைன்னா இன்னைக்கு வீட்டுலே ஒரு புயலே வந்திருக்கும்," என்றாள் மகனைத் திட்டுவது போல்.

ரவி எதற்கும் பதில் கொடுக்கவில்லை. நேராக தன் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்து அடுத்த கணமே அயர்ந்து தூங்கிவிட்டான். சாப்பிடச் சொல்ல வந்த அம்மா அவன் காலணிகள் அணிந்தபடியே, கால்கள் தொங்கிக் கொண்ட நிலையில் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து, "என்ன ஆயிடுச்சு இவனுக்கு?" என்று வருத்தப்பட்டு அவனது காலணிகளைக் கழற்றிவிட்டு கால்களை படுக்கை மேல் தள்ளி அறை கதவைச் சாத்திவிட்டு போனாள்.

Important: In case you wish to communicate with me, please send a mail to This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.;/a>

முக்கியம்: என்னைத் தொடர்புகொள்ள விரும்பினால் எனக்கு  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.;/a> என்ற முகவரியில் இ-மெயில் அனுப்பலாம்.